மக்களின் இதயங்களில் பொன்மனச் செம்மலாக என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர்
சினிமா
கர்நாடக மாநிலத்தின் அன்றைய முதல்வர் குண்டுராவைச் சந்தித்துவிட்டு எம்.ஜி.ஆர் அவர்கள் சென்னை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த அந்த மதிய வேளையில், ஓசூர் சாலையின் சுட்டெரிக்கும் வெயில் தாரை உருக வைத்துக்கொண்டிருந்தது. அப்பொழுது பாதையின் ஓரத்தில் தாள முடியாத தகிப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த அந்த இரண்டு உருவங்கள் அவர் கண்ணில் பட்டன.
ஒரு வயதான மூதாட்டியும், பத்து வயதே நிரம்பிய ஒரு சிறுமியும் தலையில் காய்ந்த புல்கட்டுகளைச் சுமந்துகொண்டு, வெறும் கால்களோடு அந்தப் பொசுக்கும் தார்ச் சாலையில் நின்றும் நடந்தும் போய்க் கொண்டிருந்தார்கள். கால்களில் செருப்பில்லாமல், வெயில் தாங்க முடியாமல் அவர்கள் ஒவ்வோர் அடியையும் பதறிப் பதறி வைப்பதைக் கண்ட கணமே தன் காரை நிறுத்தச் சொன்னார் எம் ஜி ஆர். அவர்களிடம் விசாரித்தபோது, அந்தப் புல்கட்டை விற்றால் அவர்களுக்குக் கிடைக்கப் போவது வெறும் ஒரு ரூபாய்தான் என்பதும், வெயிலின் கொடுமையால் கால்கள் வெந்து போவதால்தான் தத்தித் தத்தி நடந்து செல்வதாகவும் கவலையோடு கூறினார்கள். அதைக் கேட்ட அடுத்த நொடியே, எம்.ஜி.ஆர் யோசிக்கவே இல்லை. தன் காரில் உடன் பயணித்துக் கொண்டிருந்த மனைவி ஜானகி அம்மையாரையும் உறவினரையும் பார்த்து அவர்கள் அணிந்திருந்த செருப்புகளை உடனடியாகக் கழற்றிக் கொடுக்கச் சொன்னார். அத்துடன் அவசரத் தேவைகளுக்காகத் தன்னிடம் இருந்த கணிசமான பணத்தையும் எடுத்து அந்த மூதாட்டியின் கைகளில் திணித்தார்.
அதுவரை தங்களுக்கு உதவி செய்வது யார் என்றே அறியாமல் திகைப்பில் நின்றிருந்த அந்தப் பெண்ணுக்கு, காரின் கருப்புக் கண்ணாடி மெல்லக் கீழே இறங்கி, அதனுள்ளிருந்து அந்தப் பேரன்பின் நாயகன் புன்னகையோடு கை கூப்பி வணங்கிய போதுதான் உண்மை புரிந்தது. தங்களுக்கு நேரில் வந்து உதவி செய்தது தமிழகத்தின் முதலமைச்சரான எம்.ஜி.ஆர்தான் என்பதை உணர்ந்த கணத்தில், அந்த மூதாட்டியும் சிறுமியும் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கினர். அவர்கள் தன்னை வியப்போடு பார்த்துக்கொண்டிருக்க, புரட்சித் தலைவரோ தமக்கே உரித்தான பேரன்பு தழும்பும் சிரிப்போடு அங்கிருந்து சென்னை நோக்கிப் புறப்பட்டார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் ஏழைகள் வெறும் காலில் கல்லிலும் முள்ளிலும் வெயிலிலும் நடக்கக்கூடாது என்ற எண்ணத்தில் அவர்களுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தை எம்.ஜி.ஆர். அரசு செயல்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
துன்பப்படுபவர்கள் தன்னிடம் வந்து கேட்கும் வரை காத்திருக்காமல் அவர்களின் கண்ணீரைத் தேடிச் சென்று துடைக்கும் அந்த உன்னதமான மனிதநேயம்தான் எம்.ஜி.ஆரை என்றும் மக்களின் இதயங்களில் "பொன்மனச் செம்மலாக" வாழவைத்துக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை.
ஓம் பராசக்தி!
- முனைவர் ரத்னமாலா புரூஸ்






















