• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜப்பானில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிரோசாகி கோட்டையை கயிறு கட்டி இழுத்து நகர்த்திய மக்கள்

ஜப்பானில் சுமார் 360 டன் எடை கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிரோசாகி கோட்டையை, சுமார் 1,800 பேர் ஒன்றிணைந்து கயிற்றால் இழுத்து 2 மீட்டருக்கும் அதிகமான தூரம் வெற்றிகரமாக நகர்த்திய அரிய நிகழ்வு உலகளவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், ஹிரோசாகி கோட்டையின் அடிப்பகுதியில் இருந்த கல் சுவர்கள் பலத்த சேதமடைந்தன.

இதையடுத்து, அந்தச் சுவர்களைச் சீரமைக்கும் பணிக்காக, கடந்த 2015-ம் ஆண்டு கோட்டையை இடிக்காமல் அப்படியே பாதுகாப்பாக 78 மீட்டர் தூரத்திற்கு தற்காலிகமாக நகர்த்தி வைத்தனர்.

தற்போது, கோட்டையின் அடிப்பகுதி கல் சுவர்கள் முழுமையாகச் சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோட்டையை மீண்டும் அதன் பழைய இடத்திற்குக் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கியுள்ளன.

இதற்காக, பிரம்மாண்டமான கட்டிடங்களை இடிக்காமல் அப்படியே நகர்த்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஜப்பானின் பாரம்பரிய தொழில்நுட்பமான ‘ஹிக்கியா’ முறை பயன்படுத்தப்பட்டது.

கோட்டையின் அடிப்பகுதியில் நவீன உருளைகள் மற்றும் தண்டவாளங்கள் போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, மனித ஆற்றல் மற்றும் இயந்திரங்களின் உதவியுடன் அது நகர்த்தப்பட்டு வருகிறது.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற இந்த அரிய நிகழ்வில், உள்ளூர் மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என சுமார் 1,800 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

அவர்கள் 80 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, 30 மீட்டர் நீளமுள்ள தடிமனான கயிறுகளைப் பிடித்து, பாரம்பரிய உற்சாகக் கோஷங்களுடன் கோட்டையை இழுத்தனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டு முயற்சியில், முதல் நாளில் 1.13 மீட்டரும், இரண்டாம் நாளில் 1.09 மீட்டரும் என மொத்தம் 2.22 மீட்டர் தூரத்திற்கு 360 டன் எடை கொண்ட கோட்டை நகர்த்தப்பட்டது.

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சுமார் 4,100 பேர் பங்கேற்புடன் கோட்டையை 5 மீட்டர் வரை நகர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்பின்னர், மீதமுள்ள 73 மீட்டர் தூரத்தை நவீன இயந்திரங்களின் உதவியுடன் நகர்த்தி, இந்த ஆண்டின் இறுதிக்குள் ஹிரோசாகி கோட்டையை மீண்டும் அதன் பழைய இடத்திலேயே முழுமையாக நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply