• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாழ்வதற்கு சொந்த வீடு இல்லாத அவலத்தில் மனிதன்

ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் என வரையறுக்கப்பட்ட விடயங்களாக உனவு மற்றும் சுத்தமான குடிநீர், உடை, உறையுள் என்பவை உள்ளன. உணவும் குடிநீரும் உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமானவை. உடைகளும், வீடும் மனிதன் மனிதனாக வாழத் தேவையானவை. ஆனால், இன்றைய இலாப மைய உலகில் மனிதனின் இருப்பிடங்கள் கேள்விக்குரியனவாக மாறி உள்ளதைப் பார்க்க முடிகின்றது. நிலமும், அதன் மீது எழுப்பப்படுகின்ற கட்டிடங்களும் பொதுச் சொத்துக்களாக இல்லாமல் தனி மனிதர்களின் சொத்துக்களாகவும், அவற்றால் கிட்டும் வருமானம் பாரிய இலாபம் ஈட்டுகின்ற ஒன்றாகவும் மாறிப் போன சூழலில் உலகில் வாழும் பெரும்பாலான மனிதர்கள் தங்களுக்கான தனித்த இல்லம் ஒன்றை வாழ்நாள் முழுவதிலும் காணாமலேயே வாழ்ந்து மடிந்து போகும் நிலை உருவாகி உள்ளதைப் பார்க்க முடிகின்றது. மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய கடப்பாடுகளைக் கொண்டுள்ள அரசாங்கங்கள் தமது கடப்பாடுகளை மறந்து பன்னாட்டு மற்றும் உள்நாட்டு வணிக நிறுவனங்களுக்குச் சேவை செய்வதே தமது பணி என நினைத்துச் செயற்பட்டுவரும் நிலையில் சொந்த வீடு என்பது உலகம் முழுவதிலும் வாழும் பல கோடிக் கணக்கான மக்களுக்கு கனவாக மாறிப் போய் உள்ளது.

இன்றைய நிலையில் உலகின் சனத்தொகை 8.3 பில்லியனாக உள்ளது. உலகம் முழுவதிலும் வாழும் இந்த ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 42 விழுக்காடு முறையான குடியிருப்பு வசதிகள் இன்றி வாழ்வதாகச் சொல்கிறது ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று. ‘ஐ.நா. உலக நகரங்கள் அறிக்கை 2026: உலகளாவிய இருப்பிடச் சிக்கல்: நடவடிக்கைக்கான வழிகள்’ என்ற பெயரிலான இந்த அறிக்கையில் உலகில் வாழும் 3.4 பில்லியன் மக்கள் பாதுகாப்பான, போதுமான, வசதியான வாழிடம் இன்றி இருப்பதாகத் தெரிவித்துள்ளது. 1.1 பில்லியன் மக்கள் முறைசாரா வாழிடங்களிலும், சேரிகளிலும் வாழ்வதாக இந்த அறிக்கை மேலும் கூறுகிறது. 2010ஆம் ஆண்டில் 201 மில்லியனாக இருந்த இந்த மக்களின் தொகை ஐந்து மடங்குக்கும் அதிகமாக உயர்ந்திருப்பதைப் பார்க்க முடிகின்றது.
 
சமநிலையற்ற பொருளாதார வளர்ச்சி, காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் விவசாய நடவடிக்கைகளில் இருந்து பெரும்பான்மைச் சமூகம் விலகி நகர்ப்புறங்களை நோக்கி மாற்று வேலை தேடி நகர்வது, அரசாங்கங்களின் தவறான பொருளாதாரக் கொள்கைகளினால் மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழப்பது, அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்க அரசாங்கங்கள் தவறுவது, தனியார் துறையின் அபரிமிதமான வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் கிராமப் புறங்களில் இருந்து நகர்ப்புறங்களை நோக்கி இடம்பெயர்ந்துவரும் மக்களின் எண்ணிக்கை தற்போது உலகளாவிய அடிப்படையில் அதிகரித்து வருகிறது. நகர்ப் புறங்களை நோக்கிப் படையெடுக்கும் உதிரித் தொழிலாளர்கள் ஈற்றில் சேரிப் புறங்களில் அல்லது தற்காலிக வதிவிடங்களில் வாழ நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்.
 
2007ஆம் ஆண்டுத் தகவல்களின் படி 50 விழுக்காடு வரையான மக்கள் உலகம் முழுவதிலும் விவசாய நடவடிக்கைகளைக் கைவிட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2050 ஆம் ஆண்டளவில் உலகச் சனத்தொகை 9.7 பில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் 68 விழுக்காடு மக்கள் நகர்ப்புறவாசிகளாக மாறி விடுவார்கள் என எதிர்வுகூறப்படுகின்றது. இவ்வாறு நகர்ப்புறவாசிகளாக மாறக்கூடிய 6.6 பில்லியன் மக்களில் கணிசமானவர்கள் முறையான வீட்டு வசதிகள் அற்றவர்களாக, சேரிவாசிகளாக இருப்பர் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

உலகின் 8 நாடுகளில் சேரிகளின் வளர்ச்சி அதிக அளவில் இடம்பெற்று வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தப் பட்டியலில் உள்ள நைஜீரியா, பிலிப்பைன்ஸ், எதியோப்பியா, தான்சானியா, இந்தியா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, எகிப்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகள் தென்படத் தொடங்கிவிட்டன. போர்கள், ஆயுத மோதல்கள், அரச இயந்;திரங்களின் செயலிழப்பு, வாழிடங்களில் இருந்து மக்களை பலவந்தமாக வெளியேற்றுதல், காலநிலை மாற்றத்தின் விளைவுகள் என பல்வேறு காரணிகள் இத்தகைய போக்கைத் துரிதப்படுத்துகின்றன.
 
தங்கள் வாழிடங்களில் இருந்து வெளியேற்றப்படும் மக்களின் எண்ணிக்கை உலகளாவிய அடிப்படையில் 2001ஆம் ஆண்டு 21 மில்லியனாக விளங்கியது. நடப்பு வருடத்தில் இது ஐந்து மடங்காக உயர்ந்து 120 மில்லியனாக மாறியுள்ளது. எதிர்காலத்தில் போர்கள் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக மேலும் பல மில்லியன் மக்கள் தங்கள் வாழிடங்களை இழப்பர். 2050ஆம் ஆண்டளவில் மேலும் 300 முதல் 400 மில்லியன் வரையான மக்கள் தங்கள் வாழிடத்தை இழக்க நேரிடும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கிறது இந்த அறிக்கை.

காலநிலை மாற்றம் காரணமாக 2040ஆம் ஆண்டளவில் தற்போதுள்ள வீடுகளில் 167 மில்லியன் வீடுகள் உலகம் முழுவதிலும் அழிந்து போக வாய்ப்பு உள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. தற்போது ஐரோப்பாவில் வீசும் வெப்ப அலை காரணமாக ஏற்பட்ட காட்டுத் தீ பல ஆயிரம் வீடுகளை எரித்துச் சாம்பலாக்கி உள்ளதை நாமறிவோம்.
 
குடியிருக்கத் தேவையான நிலம் தனிமனித சொத்தாக மாற்றப்பட்டு, இடத்துக்கிடம் பெறுமதி நிர்ணயிக்கப்படும் நிலையில் அன்றாடங்காய்ச்சிகளாக இருந்த மக்கள் சொந்த நிலம் அற்றவர்களாக மாற்றப்பட்டு வருகின்றனர். நகர்ப்புறங்களைப் பெறுத்தவரை வீட்டின் பெறுமதியை விடவும் பல மடங்கு பெறுமதி கூடியதாக நிலம் உள்ளது. நிலத்துடன் கூடிய தொழில்துறை மிகப் பெரும் வளர்ச்சி கண்டுள்ள நிலையில் இந்தத் தொழிலில் ஈடுபடும் நிறுவனங்கள் நிலத்தைக் கைப்பற்றும் போட்டியில் இறங்கியுள்ளன. தேர்தல் நிதி என்ற போர்வையில் இத்தகைய நிறுவனங்களிடம் இருந்து நிதியைப் பெற்று, தேர்தலில் வென்று ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் நன்றிக்கடனாக அத்தகைய நிறுவனங்கள் கோரும் இடங்களை குறைந்த விலையில் விற்பனை செய்ய முயல்கின்றன. இலாபம் ஈட்டித் தரக்கூடிய இடங்கள் என அத்தகைய நிறுவனங்களால் மதிப்பிடப்படும் இடங்களில் முறையான ஆவணங்கள் இன்றி வாழும் மக்களைப் பலவந்தமாக வெளியேற்றி தமது எஜமானர்களுக்குச் சேவை செய்வதில் அரசாங்கங்கள் ஆர்வம் காட்டுகின்றன. மக்களுக்கு முறையான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் கடப்பாட்டைக் கொண்டுள்ள அரசாங்கங்கள் மக்களின் எதிர்ப்பையும் மீறி இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
உலகின் மிகப் பெரிய மனை மற்றும் நில வணிக நிறுவனமான  Blackstone    உள்ளிட்ட நிறுவனங்கள் உலகின் மிகப் பாரிய நகரங்கள் எங்கினும் உள்ள இடங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றன.   AirBnB  எனப்படும் உலகளாவிய வாடகை வீட்டு நிறுவனம் தன்னிடம் உள்ள வீடுகள் யாவற்றையும் உல்லாசப் பயணிகளுக்காகப் பாவிக்கத் தொடங்கியுள்ள நிலையில் வீடுகளின் பெறுமதி அதிகரித்துச் செல்கிறது.

உலகளாவிய குடியிருப்புப் பிரச்சனை தொடர்பான ஐ.நா. அறிக்கை வெளியாகி ஒரு சில மாதங்கள் கடந்த நிலையிலும் அதற்கான எதிர்வினை அரசாங்க மட்டங்களில் எதுவும் இல்லாத சூழலே நிலவுகின்றது. ஒரு சில தொண்டு நிறுவனங்கள் மாத்திரமே இதுவரை எதிர்வினை ஆற்றியுள்ளதைப் பார்க்க முடிகின்றது.

இயற்கை மனிதனுக்கு வழங்கிய வழங்கிய கொடைகளுள் ஒன்று நிலம். நிலம் இன்று பெரும்பாலும் தனிநபர் உடைமையாகி உள்ள நிலையில் அதற்கான விலையை நிர்ணயிப்பது யார் என்ற கேள்வி எழுகின்றது. கட்டுமானப் பொருட்களின் பெறுமதியை வைத்து வீடுகளின் விலை தீர்மானிக்கப்படுகின்றது. ஆனால் நிலத்தின் விலையோ இடத்தைப் பொறுத்தும், அது யாரின் உடைமையாக உள்ளது என்பதைப் பொறுத்தும் தீர்மானிக்கப்படுகின்றது. அளவுக்கு அதிகமான இத்தகைய விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட அரசாங்கங்கள் பெரு வணிக நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இந்தப் போக்கில் மாற்றம் ஏற்படுவது எப்போது? சாதாரண மனிதனும் சொந்த வீட்டில் நிம்மதியாக, கௌரவமான சூழலில் வாழும் நிலை தோன்றுவது எப்போது? சாமானிய மக்களின் வாழ்நாள் கனவு நிறைவேறுவது எப்போது? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

சுவிசிலிருந்து சண் தவராஜா

Leave a Reply