இது புரட்சியில்லையென்றால் வேறெதுப் புரட்சி..?
சினிமா
'புரட்சித்தலைவராம் எம்ஜிஆரு.. என்னத்த அப்படி புரட்சிப் பண்ணிட்டாரு ஒங்க புரட்சித்தலைவரு' இப்படி புரட்சித்தலைவரின் அரசியல் எதிரிகள் சொல்லிவிட்டு நக்கலாய்ச் சிரிப்பது வழக்கம். எது புரட்சியென அவர்களுக்குப் புரிவதில் சிக்கலிருக்கலாம். இதெல்லாமொரு புரட்சியாயென இன்றைக்கு இருப்பவர்கள் கூட கருதலாம். ஆனால்,
1977-87 காலகட்டத்தில் அவர் நடத்திய ஒவ்வொன்றுமே புரட்சி தான். நான் கீழ்ச்சொல்லப்போகும் நிகழ்வெல்லாம் நடக்காமலிருந்திருந்தால், தமிழ்நாடு இன்றைக்கும் வட மாநிலத்தைப் போலத் தானிருந்திருக்கும்.
மனம்போனப் போக்கில் வார்த்தைகளை வீசியெறியாமல், மனசாட்சியோடு நினைத்துப் பாருங்கள். உங்களுக்கும் கூட புரட்சித்தலைவர் தந்த திட்டங்களின் உண்மையும் உன்னதமும் புரியலாம்.
அவர் நிகழ்த்திய 'அரசியல்' புரட்சிப் பற்றியெல்லாம் தனியாக எழுதுவோம். 'அரசு' புரட்சி பற்றி லைட்டா தொட்டு வைப்போம்
★தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்த இட ஒதுக்கீட்டு நாயகன்
★12,600 கிராமங்களுக்கும் VAO என்ற பதவியையே உருவாக்கிய நிர்வாகப் புரட்சியாளன்
★22,000 ரேஷன் கடைகளைக் கொண்டுவந்து அடித்தட்டு மக்களை அடி அடியாய் உயர்த்த உழைத்தவன்
★4000 புதிய வழித்தடங்களை உருவாக்கி ஊர்களை இணைத்த பேருந்து புரட்சியாளன்
★விவசாயிகளுக்கு முதன் முதலில் இலவச மின்சாரத்தைக் கொடுத்த மின்சார மனிதன்
★பயிர்க்காப்பீடு என்பதை முதன் முதலில் கொண்டுவந்த விவசாயிகளின் காவலன்
★உயர்கல்வி உலகின் தன்னிகற்ற தலைவனவன்
★அண்ணா, பெரியார், பாரதியார், பாரதிதாசன், அன்னைதெரசா போன்ற பல்கலைக்கழகத்தை உருவாக்கிய படிக்காத பாமரன்
★தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு, தமிழ்நாடு முழுக்க தொழிற்பேட்டைகள் பலவற்றை உருவாக்கி பொருளாதாரத்தை மேம்படுத்த பகீரத முயற்சி எடுத்த பொருளாதாரப் புரட்சியாளன்
★அரசு அலுவலங்களில் தமிழில் கையெழுத்திட வேண்டும் என சட்டமியற்றிவன்.
★தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தை, தரணி போற்றும் தமிழுக்காக, 1000 ஏக்கரில் அசுரவேகத்தில் உருவாக்கிய பச்சைத் தமிழன்
★'ஒரு குடிசை ஒரு விளக்கு' என மின்சாரத்தை முதன் முதலில் குடிசைக்குக் கொண்டு சென்ற 'ஒளிவிளக்குப்' புரட்சியாளன்
எந்த முதலமைச்சராலும் செய்ய முடியாத புரட்சிகளை எல்லாம் வெறும் பத்தாண்டுகளில் படபடவென பட்டாசாய் வெடித்து முடித்து,
அரசு நிர்வாகத்தில் அசைக்க முடியாத நிர்வாகப் பெரும் சக்கவர்த்தியாய் இருந்தார் ஒருவரென்றால், எந்தத் தயக்கமுமில்லாமல் சொல்லுவேன் அது எம்,
'புரட்சி'த்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான்.
இது புரட்சியில்லையென்றால் வேறெதுப் புரட்சி..? இவர் செய்தது புரட்சியில்லையென்றால் வேறெவர் செய்ததுப் புரட்சி..?
வாயில் வடை சுடுவதல்ல புரட்சி, இருந்ததை வைத்து விடை சொன்னதே புரட்சி.. பிறந்த நாட்களில் மட்டும்
நினைவிலிருப்பவனல்லன் இவன் நினைவிருக்கும் வரை
நிலைத்திருக்கும்.. நிரந்தரமானவனவன்






















