• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீனாவில் உருவாகும் புதுவித டார்க் டூரிசம் - செயற்கைப் பேரிடர்களைப் பணம்கொடுத்து அனுபவிக்கும் இளைஞர்கள்

சீனாவில் தற்போது இளைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே 'டார்க் டூரிசம்' எனும் சோக சம்பவங்கள் அல்லது ஆபத்தான சூழல்களை அனுபவிக்கும் புதிய டிரெண்ட் வேகமாகப் பரவி வருகிறது. வழக்கமாக வரலாற்றுப் பேரழிவுகள் நடந்த இடங்களைப் பார்வையிடுவதற்குப் பதிலாக, செயற்கையாக உருவாக்கப்படும் இயற்கைச் சீற்றங்களை நேரில் சந்தித்து ஆபத்திலிருந்து தப்பிக்கும் பயிற்சிகளைப் பெற சீன இளைஞர்கள் பெரும் தொகை கொடுத்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சீனாவின் கிழக்குக் பகுதியில் அமைந்துள்ள ஹங்சோ நகரில் 'லுக்சிங் பேஸ்' என்ற நாட்டின் முதல் அதிநவீன செயற்கைப் பேரிடர் மையம் தொடங்கப்பட்டுள்ளது. பிரபல சீனப் பெண் மற்றும் ஆண் சாகசப் பயணிகளான சாங் சின்யு மற்றும் லியாங் ஹாங் ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த மையம், குறுகிய காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த மையத்தில் மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் செயற்கைப் புயல், கனமழை, மற்றும் திடீர் நகர்ப்புற வெள்ளப்பெருக்கு போன்ற ஆபத்தான சூழல்கள் அப்படியே உருவாக்கப்படுகின்றன. இங்கு வருபவர்கள் வெப்பப் பாதுகாப்பு உடைகள் மற்றும் தலைக்கவசங்களை அணிந்து, நிஜ பேரிடரின் நடுவே நின்று தப்பிப்பிழைக்கும் வழிமுறைகளைக் கற்றுக்கொள்கின்றனர்.

கட்டண விவரங்கள்

* தனிநபர் பெரியவர்களுக்கான கட்டணம்: 899 யுவான் (சுமார் $135 USD)

* குடும்பப் தொகுப்புக் கட்டணம்: 5,000 யுவான் வரை

இந்த மையம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 1,60,000-க்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளனர். இந்த பேரிடர் அனுபவ மையம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஆபத்து காலங்களில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் தற்காப்புப் பயிற்சிகளைப் பெற இது ஒரு நல்ல வாய்ப்பு என சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

அதேவேளையில், நிஜ வாழ்க்கையில் வெள்ளம் மற்றும் இயற்கைச் சீற்றங்களால் வீடுகளையும் உறவினர்களையும் இழந்து தவிக்கும் மக்களின் வேதனையை, வணிக ரீதியிலான பொழுதுபோக்காக மாற்றுவது அவர்களின் துயரத்தைக் கொச்சைப்படுத்துவது போல் உள்ளது என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 

Leave a Reply