கனடாவில் வரிக் கொள்கை மாற்றம்
கனடா
கனடாவில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் வரிக் கொள்கை சீர்திருத்தங்களை ஒட்டாவா அரசு "படிப்படியாக" அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதில் சிறு வணிகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் பிரதமர் மார்க் கார்னியின் வரவுசெலவுத் திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேய்ன் லாங் தெரிவித்துள்ளார்.
கனடாவின் சிக்கலான வரி அமைப்பை எளிமையாக்கி, மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என பல வரி நிபுணர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போதைய வரி முறையின் விதிமுறைகள் அடுக்கடுக்காக அதிகரித்து, வணிகங்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் சுமையாக மாறியுள்ளதை அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
கனடாவின் சிக்கலான வரி விதிகளால் சில முக்கிய சர்வதேச முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தயங்குவதாகவும், இந்தத் தடைகளைக் குறைத்து முதலீடுகளை ஈர்ப்பதே அரசின் நோக்கம் என்றும் வேய்ன் லாங் குறிப்பிட்டார்.
பிரதமர் மார்க் கார்னியின் தலைமையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இரண்டாவது இலையுதிர் கால வரவுசெலவுத் திட்டம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் "இரண்டாம் கட்ட நடவடிக்கையாக" இருக்கும். கனடாவில் பெரிய அளவிலான வரி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு சுமார் 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.
தற்போதைய அரசு சிறு மாற்றங்களை மட்டுமே செய்து வருவதாகவும், பொருளாதாரத்தை முடக்கும் பழைய வரி முறையை முழுமையாக மாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கன்சர்வேடிவ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
சிறு வணிகர்களுக்கான வரி விதிப்பு நடைமுறைகளை எளிமையாக்கி, அறிக்கை சமர்ப்பிக்கும் சுமையைக் குறைப்பதே அரசின் முதன்மை இலக்காக உள்ளது.
அரசின் இந்த முடிவை கனடிய சுதந்திர வணிக கூட்டமைப்பு வரவேற்றுள்ள அதே வேளையில், நிஜமான மாற்றம் வரவுசெலவுத் திட்டத்தில் பிரதிபலித்தால் மட்டுமே சிறு வணிகர்கள் பலனடைவர் என்று சுட்டிக்காட்டியுள்ளது.























