தனது மனைவியை அவரது காதலனுக்கே திருமணம் செய்து வைத்த கணவர்..
மனைவிக்கு தனது காதலன் மீது இருக்கும் ஆழமான காதலைப் புரிந்துகொண்ட கணவர், 21 ஆண்டுகால திருமண வாழ்க்கையைத் துறந்து, தனது மனைவியை அவரது காதலனுக்கே திருமணம் செய்து வைத்த சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் சந்த் கபீர் நகர் பகுதியில் இருந்து வித்தியாசமான ஒரு சம்பவம் வெளியாகியுள்ளது. தான்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவ்ரி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
21 ஆண்டுகளுக்கு முன்பு புத்திராம் நிஷாத் என்பவர் பூல்மதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.
பின்னர், இருவருக்கும் இடையிலான திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மனைவிக்கு வேறொருவருடன் காதல் இருப்பதைப் புரிந்துகொண்ட கணவர், தனது மனைவி பூல்மதியை அவரது காதலரான அவதேஷுடன் கோயிலில் வைத்து திருமணம் செய்து வைத்துள்ளார்.
அதன் பின்னர், இருவரையும் கணவர் வழியனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
கணவரின் இந்த வித்தியாசமான முடிவுதான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.






















