2 நாட்களில் ரூ.100 கோடி வசூல் - கருப்பு படத்தின் சாதனையை முறியடித்தது விஸ்வநாத் அண்ட் சன்ஸ்...
சினிமா
நடிகர் சூர்யா மற்றும் மமிதா பைஜு நடிப்பில், இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியான 2 நாட்களில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்தத் திரைப்படத்தை தயாரித்த 'சித்தாரா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ்' நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில், "விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. வெறும் 2 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது" என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் மூலம், சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகக் குறுகிய காலத்தில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டிய முதல் திரைப்படம் என்ற பெருமையை ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ பெற்றுள்ளது.
இந்த ஆண்டில் சூர்யா நடிப்பில் வெளியாகி ரூ.100 கோடி வசூலைத் தாண்டும் இரண்டாவது தொடர்ச்சியான திரைப்படம் இதுவாகும்.
இதற்கு முன்னதாக, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ‘கருப்பு’ திரைப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அந்தப் படம் வெளியாகி 3 நாட்களில் ரூ.100 கோடி வசூலை எட்டிய நிலையில், தற்போது ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் 2 நாட்களிலேயே அந்த மைல்கல்லை எட்டி, ‘கருப்பு’ படத்தின் ஆரம்பகால வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
சித்தாரா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் மற்றும் ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களின் கீழ் நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார், நவின் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார்.






















