ஓ.டி.டி.க்கு வரும் இதயம் முரளி...
சினிமா
வருகிற 7-ஆம் தேதி முதல் ‘இதயம் முரளி’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.
டான் பிக்சர்ஸ் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4-வது தயாரிப்பாக, ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி நடிப்பில் உருவான திரைப்படம் ‘இதயம் முரளி’. தமிழ் திரையுலகில் மறைந்த முன்னணி நடிகர் முரளியின் எவர்கிரீன் கதாபாத்திரமான 'இதயம் முரளி' என்ற பெயரிலேயே இப்படம் உருவானதால், அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இப்படத்தில் அதர்வாவுடன் இணைந்து ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் மற்றும் நிஹாரிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், பிரபல இசையமைப்பாளர் தமன் எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
முழுக்க முழுக்க இளைஞர்களைக் கவரும் வகையிலான பக்கா ரொமாண்டிக் திரைப்படமாக எடுக்கப்பட்ட ‘இதயம் முரளி’, கடந்த மாதம் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதைத் தொடர்ந்து, தற்போது இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றியுள்ளது. அதன்படி, வருகிற 7-ஆம் தேதி முதல் ‘இதயம் முரளி’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. திரையரங்குகளில் தவறவிட்டவர்கள் மற்றும் மீண்டும் பார்க்க விரும்பும் ரசிகர்கள் வசதிக்காக தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் இப்படம் வெளியாகிறது.























