ஹார்முஸில் கப்பல்களை தாக்கினால் ஈரானின் பாலங்கள், மின் நிலையங்கள் தகர்க்கப்படும் - டிரம்ப் புது எச்சரிக்கை
அமெரிக்கா - ஈரான் இடையே போர் உச்சக்கட்டத்தில் நடந்து வரும் சூழலில் ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்குதல் நடத்தினால் ஈரானின் பலன்களையும், மின் நிலையங்களையும் தகர்த்து அழிப்போம் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்ச்சியாக 12வது இரவாக நேற்றிரவு நீடித்துள்ளது.
போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 11 நாட்களில் அமெரிக்க தாக்குதல்களால் 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஈரானிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக, பஹ்ரைன், குவைத் மற்றும் பிற வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த சூழலில் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் வெளியிட்டுள்ள எச்சரிக்கை பதவில், "இனிவரும் நாட்களில், ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் எந்தவொரு கப்பல் மீதும் ஈரான் ஏவுகணை, ராக்கெட் அல்லது டிரோன் தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாக ஈரானின் ஒரு பாலம் அல்லது ஒரு மின் நிலையத்தை அமெரிக்கப் படைகள் குண்டுவீசி அழிக்கும். தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள உள்கட்டமைப்புகளும் இதில் அடங்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்காவிற்கு விருப்பமில்லை என்று தெரிவித்த டிரம்ப், விரைவில் அந்த ரகசிய அணு உலை மையம் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
மறுபுறம் போரின்போது மத்திய கிழக்கில் கொல்லப்பட்டு, டெலாவேரில் உள்ள ஒரு விமானப்படைத் தளத்தில் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நான்கு அமெரிக்க வீரர்களுக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் அஞ்சலி செலுத்தினார்.
செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தச் சடங்கை "ஒரு அதிபராக செய்வதற்கு மிகவும் கடினமான காரியங்களில் ஒன்று" என்று குறிப்பிட்டார்.
உலகளவில் வர்த்தகம் செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் 20% ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்த பிறகு, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை உலகச் சந்தையில் பீப்பாய்க்கு 94 டாலராக உயர்ந்துள்ளது.























