ஒரே தாயின் வயிற்றில் உண்டு வளர்ந்த எங்களை அரசியல் பிரித்துப் பார்த்துவிட்டது
சினிமா
எம்.ஜி.ஆர் அமெரிக்க மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது,' ஒரே தாயின் வயிற்றில் உண்டு வளர்ந்த எங்களை அரசியல் பிரித்துப் பார்த்துவிட்டது ' என சிவாஜி கண்ணிரோடு கட்டுரை எழுதினார் சினிமா சஞ்சிகை ஒன்றுக்கு.
தம்பி என வாஞ்சையாக அழைத்தார் எம்.ஜி.ஆர். ‘ அண்ணா’ என அதை வழிமொழிந்தார் சிவாஜி. இப்படி தொழில் போட்டியை மீறி ஒருவருக்கொருவர் அன்பு காட்டிய சந்தர்ப்பங்களில் ஒன்று, சிவாஜியின் அமெரிக்க பயணத்தின்போது எம்.ஜி.ஆர் செய்த நெகிழ்வான செயல். அமெரிக்கா சென்று திரும்பிய சிவாஜிக்கு நடிகர் சங்கம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளித்த எம்.ஜி.ஆர், அவர் பொறுப்பாசிரியராக இருந்த ‘நடிகன் குரல்’ இதழில் சிவாஜி பற்றி அருமையானதொரு கட்டுரை எழுதினார்.
“ தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. - இது குறள்
- நாம் எடுத்துக்கொள்ளும் பொறுப்பில் புகழோடு விளங்க வேண்டும் என்பது தான் அக்குறளின் உட்பொருள். தம்பி கணேசன் அவர்கள் இக்குறளுக்கு முற்றிலும் பொருத்தமான தகுதி பெற்றவர். இன்று புகழ் குன்றின் சிகரத்தில் பொன்னொளி வீசும் கலைச் செம்மலாய் திகழும் இவர், பல்லாண்டுகளுக்கு முன்னரே, முன்னேற்றத்தின் முன்னோட்டமான அடிப்படைத்திறமைகள் பெற்றிருந்தார் என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
எதிலும் குறை காண்பவர்கள் இருப்பார்கள். அவர்கள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். உண்மையில் அவர்கள் தான் மற்றவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறவர்கள்! அந்தத் துணைதான் இன்றைய தினம் சிவாஜி கணேசன் அவர்களை அமெரிக்கா வரை அழைத்துச் சென்றிருக்கிறது.
முன்னர் கலைவாணர் அவர்கள் முதன்முதலாக ரஷ்ய விஜயம் செய்து திரும்பியபோது, சென்னைக் கடற்கரையிலும், மற்றப் பொதுவிடங்களிலும் பெரும் பாராட்டு விழாக்கள் நடத்தி மகிழ்ந்தோம்.
அதற்குப் பிறகு அவ்வப்போது சில நடிகமணிகள் ஒருசில அயல்நாடுகளுக்குச் சென்று திரும்பிவந்த போது, பெரும் விழாக்கள் நடத்தவில்லை என்றாலும், நமது நன்மதிப்பைத் தெரிவித்தோம். இப்போது சிவாஜி கணேசன் அவர்களோ, சரித்திரத்திலேயே முதன் முறையாக அமெரிக்க அரசினரால் அழைக்கப்பட்டுச் சென்ற நிகழ்ச்சி மிகவும் போற்றத்தக்கதால் விசேஷமாக விழா நடத்தினோம்.
இனி அடுத்தடுத்துச் செல்பவர்களையும், பாராட்டவே விரும்புகிறேன். முதன் முறையாகச் சென்று நம்மவருக்குப் புகழ்திரட்டி வந்த காரணத்தால் தம்பி கணேசனுக்கு இப்பெரும் விழாவை நடத்தினோம். இந்த அளவுக்கு விரிவாகச் செய்யமுடியாவிடினும் இதயங்கனிந்த பாராட்டுக்களை இனிச் செல்வோருக்கு எப்போதும் வழங்கக் காத்திருக்கிறேன்.
தம்பி கணேசனுடைய புகழ் இன்னும் மேலோங்கட்டும்! அவர் நீடூழி வாழ என் அன்னையை இறைஞ்சுகின்றேன்”
Chandran Veerasamy






















