• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தாமதக் கட்டணத் தாக்கம் - ஹம்பாந்தோட்டையில் தேங்கி கிடக்கும் சொகுசு வாகனங்கள்

இலங்கை

அதிகபடியான தாமதக் கட்டணங்களை (Detention Charges) செலுத்த முடியாத காரணத்தால், இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,000 சொகுசு வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கைபயண திட்டமிடல்

தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் சுமார் 40,000 இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மீள் ஏற்றுமதி நடவடிக்கைகளில் ஏற்பட்ட தடங்கல்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக, குறிப்பாக துபாய் போன்ற இடங்களுக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், பல வாகனங்கள் துறைமுகத்திலேயே நீண்டகாலமாக தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீள் ஏற்றுமதிக்காக கொண்டு வரப்பட்ட வாகனங்களும் இதே தாமதக் கட்டணப் பிரச்சினையை எதிர்கொண்டு வருவதாக சுங்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான சொகுசு வாகனம் ஒன்றை விடுவிக்க உள்ளூர் இறக்குமதியாளர் ஒருவர் அண்மையில் முயற்சித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

குறித்த வாகனம் ஏறத்தாழ ஆறு ஆண்டுகளாக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

எனினும், அந்த வாகனத்தை விடுவிப்பதற்காக சுமார் 5 கோடி ரூபாய் தடுத்துவைப்பு கட்டணமாக செலுத்த வேண்டுமென அவருக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், வாகனத்தின் மொத்தச் செலவு சுமார் 7 கோடி ரூபாயாக உயர்ந்ததுடன், அதன் ஆரம்ப பெறுமதியை விட மூன்று மடங்குக்கும் அதிகமாக மாறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறித்த இறக்குமதியாளர் வாகனத்தை விடுவிக்கும் முயற்சியை கைவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்ற காரணங்களால் பல இறக்குமதியாளர்கள் தங்களது வாகனங்களை துறைமுகத்திலிருந்து மீட்காமல் விட்டு வருவதால், நூற்றுக்கணக்கான சொகுசு வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதாகவும், தாமதக் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply