மன அமைதி தேவை - சோசியல் மீடியாவில் இருந்து தற்காலிகமாக விலகினார் நடிகை கயாடு லோஹர்
இலங்கை
சமீபத்தில் தமிழில் வெளியான 'டிராகன்' மற்றும் மலையாளத் திரைப்படமான 'பள்ளிச்சட்டம்பி' ஆகியவற்றில் நடித்ததன் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றவர் காயடு லோஹர். இவர், சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். காயடு லோஹரின் இந்த திடீர் முடிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்காக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தனக்கு ஒரு மன ரீதியான இடைவெளி தேவைப்படுவதாகவும், தற்காலிகமாக டிஜிட்டல் உலகத்திலிருந்து விலகி "சுய அமைதியை" தேட விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். உடலுக்கு ஓய்வு கொடுப்பது போல, மனதுக்கும் ஓய்வு கொடுப்பது அவசியம் என்றும், திரைக்கு அப்பால் உள்ள வாழ்க்கையை வாழவும், தனக்கான நேரத்தை செலவிடவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த இடைப்பட்ட காலத்தில் தனது திரைப்படங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் குறித்த விபரங்களை அவரது குழுவினர் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்வார்கள் என்றும், தொடர்ந்து தனக்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறி "See you soon" என்ற வாசகத்துடன் தனது பதிவை முடித்துள்ளார்.
தற்போது காயடு லோஹர் கைவசம் துல்கர் சல்மானின் 'ஐ அம் கேம்', நானியின் 'தி பேரடைஸ்' மற்றும் தமிழில் அதர்வாவின் 'இதயம் முரளி', ஜி.வி.பிரகாஷின் 'இம்மார்டல்', மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவாகும் 'மஞ்சணத்தி' என பல முக்கியத் திரைப்படங்கள் வரிசையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.






















