அடுத்த மாதம் விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டம்
சினிமா
எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஜனநாயகன்’. கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வர இருந்த இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் படம் திரைக்கு வருவதில் இழுபறி நீடித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க ‘ஜனநாயகன்’ படம் ஆன்லைனில் கசிந்ததால் மேலும் படத்திற்கு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனிடையே, விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே.நாராயணா நேற்று திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து அவர் அளித்த பேட்டியில், ‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வருவதற்காக காத்திருக்கிறோம். விரைவில் கிடைத்து விடும் என நம்புகிறோம். எவ்வளவு சீக்கிரம் படத்தை வெளியிட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ‘ஜனநாயகன்’ படத்தை வெளியிடுவோம் என்று கூறினார்.
இந்த நிலையில், தற்போது ‘ஜனநாயகன்’ படம் குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் டிரெண்டிங்கில் ‘ஜனநாயகன்’ முதலிடத்தில் உள்ளது. அதாவது ‘ஜனநாயகன்’ படம் ஜூன் மாதம் 19-ந்தேதி வெளியாகிறது என்ற தகவலே சமூக வலைத்தளங்களில் உலாவருகிறது. விஜய் பிறந்தநாளையொட்டி ஜூன் மாதத்தில் ‘ஜனநாயகன்’ வெளியிடப்படலாம் என்றே கூறப்படுகிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும். ஜூன் 19-ந்தேதி ‘ஜனநாயகன்’ வெளியீடு, ஜூன் 22-ந்தேதி விஜய் பிறந்தநாள் என இரு கொண்டாட்டங்கள் கொண்டாடப்பட உள்ளது.
முன்னதாக, ‘ஜனநாயகன்’ படம் வெளியீட்டு தேதி குறித்த பல்வேறு யூகங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் தற்போது உலா வரும் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...






















