எங்கள் நாடு விற்பனைக்கு அல்ல - அமெரிக்காவை நோஸ்கட் செய்த கிறீன்லாந்து
அமெரிக்காவின் இந்த இணைப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கிறீன்லாந்து (Greenland) அரசாங்கம், "இந்த பிரம்மாண்டமான தீவு எமது மக்களுக்கு மட்டுமே சொந்தமானது, இது ஒருபோதும் விற்பனைக்கு அல்ல" என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
கிறீன்லாந்தில் (Greenland) அமெரிக்கா தனது புதிய மற்றும் மிகப்பெரிய தூதரக மையத்தை வியாழக்கிழமை திறந்துள்ளது.
இந் நிலையில், ஆர்க்டிக் தீவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிக செல்வாக்கைச் செலுத்த முயல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டென்மார்க்கின் அரை-சுயாட்சிப் பகுதியான கிறீன்லாந்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் டிரம்ப்பின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாட்டின் பிரதமர் ஜென்ஸ்-பிரடெரிக் நீல்சன் (Jens-Frederik Nielsen) உட்படப் பல முக்கிய உள்ளூர் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இந்தத் தூதரகத் திறப்பு விழா அழைப்பை முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளனர்.
"நாங்கள் கொள்கை ரீதியாக எந்த முடிவும் எடுக்கவில்லை, ஆனால் நான் இந்த நிகழ்வில் பங்கேற்க மாட்டேன்" என்று கிறீன்லாந்து பிரதமர் உள்ளூர் நாளிதழான Sermitsiaq இற்குத் தெரிவித்துள்ளார்.
புதிய தூதரகத்திற்கு வெளியே திரண்ட நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், கிறீன்லாந்தின் சிவப்பு மற்றும் வெள்ளை நிறக் கொடிகளை ஏந்தியவாறு, "அமெரிக்காவே, இதை நிறுத்து", "இல்லை என்றால் இல்லை தான்" மற்றும் "கிறீன்லாந்து கிறீன்லாந்து மக்களுக்கே சொந்தம்" என்று முழக்கங்களை எழுப்பினர்.
முன்னதாக, கிறீன்லாந்தை எவ்வாறாவது கைப்பற்றுவது என்றும், தேவைப்பட்டால் அமெரிக்க இராணுவத்தைப் பயன்படுத்துவது குறித்தும் டிரம்ப் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை கடந்த ஜனவரியில் தெரிவித்திருந்தமை NATO நட்பு நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அமெரிக்காவின் இந்த இணைப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கிறீன்லாந்து அரசாங்கம், "இந்த பிரம்மாண்டமான தீவு எமது மக்களுக்கு மட்டுமே சொந்தமானது, இது ஒருபோதும் விற்பனைக்கு அல்ல" என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது























