• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆர் ஏற்றிய முதல் வெற்றிக்கொடி!

சினிமா

400 பேர் கைது.. ஒருவர் படுகொ*லை.. போலீஸ் வெறியாட்டம்? எம்.ஜி.ஆர் ஏற்றிய முதல் வெற்றிக்கொடி!

1973இல் இடைத்தேர்தலில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்த அதிமுக, 1977 வரை நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் வென்றது என்பது தமிழக அரசியலில் மிக முக்கியமான வரலாறு.

அதிமுக என்ற புதிய கட்சி தமிழ்நாட்டில் உதயமானபோது, அதுவரை திமுகவுக்கும் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் கட்சிக்கும் மாறிமாறி ஆரத்தி எடுத்து வந்த ராஜாஜி, "நவீன யுக கிருஷ்ணன் எம்.ஜி.ஆர்" என்று புகழ்ந்து கூறினார். "இவர் தமிழ்நாட்டு மக்கள் என்ற பாண்டவர்களுடன் கைகோர்த்து கெளரவ குலமாகிய திமுகவைத் தோற்கடிக்க வந்துள்ளார்" என்றார்.

அவரது கணிப்பு கடைசியில் மெய்யானது. அதிமுக உருவாகி ஆறுமாத குழந்தையாகத் தவழ்ந்து நடை பழகிக் கொண்டிருந்த பருவத்தில்தான் திண்டுக்கல் தொகுதியில் மக்களவைத் தேர்தலுக்கான இடைத் தேர்தல் வந்தது. அப்போது ஆளும் கட்சியாக திமுக இருந்தது.

திமுக உருவான காலத்திலிருந்தே திண்டுக்கல் மற்றும் சேரன்மாதேவி ஆகிய பகுதிகளில் இக்கட்சிக்குச் செல்வாக்கு இருந்ததே இல்லை, எப்போதும் திமுக வெல்லவே முடியாத தொகுதிகளின் பட்டியலில் இவை இருந்தன.

இந்நிலையில்தான் அதிமுக உருவான 6 மாதத்தில் திண்டுக்கல் மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானது. திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டு, அதிமுக என்று புதிய ஆயுதத்தை அவர் கையில் எடுத்த இரண்டே மாதங்களில் அக்கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டி இருந்தது. அதாவது அன்றைய மக்கள் தொகையில் 2% பேர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டிருந்தனர்.

ரசிகர்கள் 20 லட்சம் நிதி அளிப்பு அவருக்கு முன்னதாகவே இருந்த சினிமா புகழ் அதிமுகவுக்கு மிகையாக வெளிச்சத்தை அளித்திருந்தது. அவர், 'நின்றால் பொதுக்கூட்டம், நடந்தால் மாநாடு' என்று அவரது ஆதரவாளர்களால் எம்.ஜி.ஆரின் ஆளுமை வர்ணிக்கப்பட்டது.

ஆளும் கட்சியான திமுக, திண்டுக்கல் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றே ஆகவே வேண்டி அரசியல் அழுத்தம் நிலவியது. ஆளும் கட்சிக்கு விடப்பட்ட சவாலாக இத்தேர்தல் கூறப்பட்டது. எனவே எம்.ஜி.ஆருக்கு எதிரான அரசியல் பிரச்சாரத்தை திமுக கூர்தீட்டியது. எம்.ஜி.ஆர். ஒரு மலையாளி என்றும் அவர் மண்ணின் மைந்தர் இல்லை என்றும் ஒரு பரப்புரையை திமுகவினர் முன்வைத்தனர். முன்னதாகவே அவர் மீது முறையாக வரி கணக்குக் காட்டாதவர் என்ற புகாரையும் முன்வைத்தது திமுக.

எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் மக்களிடம் தன்னெழுச்சியாக நிதி திரட்டி, அதன்மூலம் மக்கள் நலத் திட்டங்களைச் செய்யத் தொடங்கி இருந்தனர். வசூல் செய்யப்படும் பணம் முறையாகச் செலவழிக்கப்படவில்லை. சில செல்வாக்கு மிக்கவர்களின் பைக்குச் செல்கிறது என திமுகவினர் வாதிட்டனர்.

இதனிடையே எம்.ஜி.ஆர் முறையாக வரி கட்டுவதற்காக 20 லட்சம் ரூபாயை அவரது ரசிகர் மன்றங்கள் மூலம் திரட்டி அனுப்பியும் வைக்கப்பட்டது.

திமுகவிலிருந்து தன் அரசியல் பயணத்தைத் தொடங்கி இருந்தாலும் தனது புதிய கட்சியைத் தொடங்கிய பின்னர், அவர் திமுகவின் ஆதார கொள்கையான 'மாநில சுயாட்சி' கோட்பாட்டிலிருந்து விலகி நின்றார். பிராமண எதிர்ப்பு அரசியலையும் அவர் கையில் எடுக்கவில்லை. இந்த மிதமான அணுகுமுறை அவரை நோக்கி அதிகப்படியான மக்களை ஈர்க்கச் செய்தது.

மு.கவின் தலித் மருமகள் பிரச்சாரம் திமுக அமைச்சர்கள் மீது அவர் வைத்த ஊழல் புகாரைப் பட்டியலாகத் தயாரித்த அவர், அதை விசாரிக்க அரசியல் சார்பற்ற விசாரணை ஆணையம் தேவை என்பதை வலியுறுத்தினார். மலிவு விலை அரிசி திட்டத்திற்கு ஆதரவாகவும் மதுவிலக்குக் கொள்கைக்கு ஆதரவாகவும் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.

திண்டுக்கல் தொகுதியில் உள்ள பட்டியலின மக்கள் மத்தியில் திமுகவுக்குச் செல்வாக்கு இல்லாதிருந்தது. அதை உணர்ந்த மு.கருணாநிதி, தன் மொத்த அமைச்சர்களையும் அங்கு முகாமிட உத்தரவிட்டார். பட்டியலின மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த 13 லட்சம் ரூபாய் செலவில் பசு மாடுகளை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தினார். பரப்புரை மேடைகளில் "எனது மகன் ஒரு பட்டியலின பெண்ணைத்தான் மணம் புரிந்துகொண்டுள்ளார்" என்று உறவுமுறை கொண்டாடினார்.

மற்றொரு பக்கம் எம்.ஜி.ஆர், "இந்த இடைத்தேர்தலின் வெற்றி திமுக ஆட்சி மீதான வாக்கெடுப்புக்குச் சமம்" என்று மக்களை அணி திரட்டினார். எனவே தேர்தல் களம் களேபரமானது. திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே மோதல் உண்டானது. அடிதடிகள் அதிகரித்தன. அதிமுக நகரச் செயலாளர் படுகொ*லை செய்யப்பட்டார். அதிமுகவின் 400 பேர் கைது செய்யப்பட்டனர். அதிமுகவுக்கு எதிராக திமுக ஆட்சி அதிகாரம் பயன்படுத்தப்பட்டது. இந்த மோதலில் ஒரு திமுகவினர் கூட கைது செய்யப்படவில்லை. புதிய கட்சியான அதிமுகவிடம் நிதிப் பற்றாக்குறை நிலவியது. அதிகாரம் முற்றாக ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டது.

1973இல் அதிமுக வேட்பாளராக நின்ற மாயத்தேவரிடம் 16 சின்னங்கள் தரப்பட்டன. அதில் ஒன்றைத் தேர்வு செய்யலாம் என்றும் கூறப்பட்டது. அவர் எம்.ஜி.ஆரின் தேர்வுடன் 'இரட்டை இலை' சின்னத்தைத் தேர்வு செய்து போட்டியிட்டார். திமுக சார்பில் பொன் முத்துராமலிங்கமும் ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் சித்தனும் நின்றார்கள்.

திமுக தன் மொத்த சக்தியையும் செலவு செய்தும், அதிமுக வேட்பாளர் மாயத் தேவர் 2,60,824 வாக்குகளைப் பெற்று வெற்றி வாகைசூடினார். திமுக வேட்பாளர் படுதோல்வி அடைந்தார் என்பதைவிட 93,496 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் இங்கே செல்வாக்கு பெற்றிருந்தது. சித்தன் 1,19,032 வாக்குகளைப் பெற்றார். அதிமுக வாக்கு வங்கி 52% அளவுக்கு எகிறியது.

முதற்கட்டமாக 1973இல் இடைத்தேர்தலில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்த அதிமுக 1977 வரை நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் வென்றது. அதுமட்டுமல்ல 1977 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி கோட்டையில் அதிமுகவின் ஆட்சிக் கொடியைப் பறக்கவிட்ட எம்.ஜி.ஆர். அவர்1987 டிசம்பர் 24 அன்று இந்த உலகைவிட்டு மறையும் வரை தான்தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் என்பதை உறுதிசெய்திருந்தார்.
 

Leave a Reply