உன் பலத்தை நான் பார்த்துட்டேன். என் பலத்தை நீ பார்க்க வேண்டாம்?
சினிமா
எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்தவரை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வசூல் சாதனை முறி யடிக்கப்படவில்லை. இந்தப் படத்தை எடுக்கவும் அதை வெளியிடவும் எம்.ஜி.ஆர். பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதையே தனியாக ஒரு புத்தகமாக எழுதலாம். படம் முழுவதுமே பிரம்மாண்டம் என்றாலும் எம்.ஜி.ஆருக்கும் நம்பியாருக்கும் இடையே நடக்கும் புத்தர் கோயில் சண்டைக் காட்சி படத்தின் ஹைலைட்.
கதைப்படி, ஜப்பானில் புத்தபிட்சுவின் வீட்டில் அணுகுண்டு ஃபார்முலா ரகசியம் புதைத்து வைக்கப்பட்டிருக்கும். புத்த பிட்சுவின் வீடே சின்னச் சின்ன புத்தர் உருவங்களாலும் நடுவில் பெரிய புத்தர் சிலையுடனும் புத்த விஹார் போல இருக்கும். அணுகுண்டு ரகசியத்தை மீட்பதற்காக அங்கு எம்.ஜி.ஆர். செல்வார். அதற்கு முன்பே நம்பியார் அங்கு சென்று புத்த பிட்சுவைப் போல மாறு வேடத்தில் இருப்பார். அப்போது, இருவருக்கும் நடக்கும் சண்டை, ரசிகர்களுக்கு விருந்து.
அன்பையும் அகிம்சையையும் வலியுறுத்திய புத்தரின் கோயில் என்பதால் கோயிலுக்குள் நம்பியாரை எம்.ஜி.ஆர். அடிக்க மாட்டார். நம்பியாரின் அடிகளை வாங்கிக் கொண்டே கோயிலை விட்டு வெளியே வந்துவிடுவார். பின்னர், நம்பியாரைப் பார்த்து, ‘‘உன் பலத்தை நான் பார்த்துட்டேன். என் பலத்தை நீ பார்க்க வேண்டாம்? ஒரு சான்ஸ் கொடேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறும்போது ரசிகர்களின் உற்சாக வெறிக் கூச்சலால் தியேட்டர் அதிரும்.
அந்தக் காட்சியில் புத்தர் கோயிலை கலை இயக்குநர் அங்கமுத்து கண்முன் நிறுத்தியிருப்பார். க்ளைமாக்ஸில் ஸ்கேட்டிங் சண்டைக்காக எம்.ஜி.ஆர். தனது தோட்டத்தில் மாடியிலேயே ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்துக் கொண்டார். அந்தக் காட்சிக்கான செட்டும் அங்கமுத்துவின் கைவண்ணம்தான்.
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்காக ஒரு நாள் சத்யா ஸ்டுடியோவில் ‘செட்’ அமைப்பதில் அங்கமுத்து தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பணியில் முழு கவனத்துடன் வியர்க்க விறுவிறுக்க வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது தென்றலாய் காற்றுபட்டது. அதை உணர்ந்தாலும் காரியத்திலேயே கண்ணாக பெயிண்டிங் செய்து கொண்டிருந்தார் அங்கமுத்து. சிறிது நேரம் கழித்து வேலை முடிந்ததும் கைதட்டல் ஒலி. திரும்பிப் பார்த்தால் எம்.ஜி.ஆர். நின்று கொண்டிருக்கிறார். பணியில் தீவிரமாக இருந்த அங்கமுத்துவுக்கு வியர்ப்பதை பார்த்ததும் அவருக்கு காற்று வரும்படி ஃபேனை அவர் பக்கமாக எம்.ஜி.ஆர்.தான் திருப்பி வைத்திருக் கிறார். தொழிலாளர்களின் திறமைக்கு மதிப்பளிப்பதுடன் அவர்களின் கஷ்டத்தை உணர்ந்து செயல்படுபவர் எம்.ஜி.ஆர்.
- தி இந்து























