கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு The English Hub கற்றல் மையம் திறப்பு
இலங்கை
நூற்றாண்டு கால கல்விப் பாரம்பரியத்தைக் கொண்ட கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் 100-வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாக, மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட ‘The English Hub’ கற்றல் மையம் இன்றைய தினம் ( 15) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
1926 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2026 ஆம் ஆண்டுடன் தனது 100 ஆண்டுகால கல்விச் சேவையை நிறைவு செய்யும் இக்கல்லூரியின் இம்மைல்கல் நிகழ்வில், கல்லூரியின் அதிபர் எம். முவேந்தன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மையத்தை நாடா வெட்டித் திறந்து வைத்தார்.
இந்த முக்கிய திட்டமானது கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் 2004 (O/L) மற்றும் 2007 (A/L) பிரிவினரால் (Team No. 0407) முன்னெடுக்கப்பட்டு மிகவும் நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
கல்லூரியின் மகுட வாசகமான “Be and Make” என்பதற்கு இணங்க, நவீன உலகிற்குத் தேவையான மொழியாற்றலை மாணவர்களிடையே வளர்ப்பதே இம்மையத்தின் பிரதான நோக்கமாகும்.
நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ள நிலையில், இப்புதிய வசதி மாணவர்களின் கல்விப் பயணத்தில் ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















