• Welcome to TamilsGuide
செய்திகள் 1

40% சம்பள உயர்வைக் கோரும் மின்சார துறை ஊழியர்கள்

இலங்கை

மின்சாரத் துறையில் தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வைக் கோரியுள்ளன.

மேலும் அந்தக் கோரிக்கை வழங்கப்பட்டால், மின்சாரக் கட்டணங்களை சுமார் 100% அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று NTNSP தனியார் நிறுவனத்தின் தலைவர் நுசித் குமாரதுங்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மின்சார தொழிற்சங்கங்கள் 64 கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.

இவற்றில் 62 கோரிக்கைகள் ஏற்கனவே இணக்கம் காணப்பட்டுள்ளது.

மீதமுள்ள இரண்டு கோரிக்கைகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் கலந்துரையாடலுக்கு அனுப்பப்பட்டன.

40% சம்பள உயர்வு என்பது மாதத்திற்கு 1.8 பில்லியன் ரூபா மேலதிக செலவாகும், இது ஆண்டொன்றுக்கு 22 பில்லியன் ரூபாவாகும். 

2025 டிசம்பர் 31 ஆம் திகதி நிலவரப்படி மின்சார சபையின் நட்டம் 35 பில்லியன் ரூபாவாக உள்ளது. 

இந்த நிலையில் சம்பளத்தை உயர்த்தினால், மக்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது சுமையை ஏற்றி மின் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டியிருக்கும். 

2024 ஆகஸ்ட் முதல் நிலவிய 25% சம்பள முரண்பாடு களையப்பட்டுள்ளது.

 உயர் அதிகாரிகள் ஏற்கனவே 25% உயர்வைப் பெற்றிருந்த நிலையில், கீழ்நிலை ஊழியர்களுக்கு 7% – 10% மாத்திரமே கிடைத்திருந்தது. 

இது 2025 ஜனவரி 1 முதல் சீர்செய்யப்பட்டது. 

தற்போது இச்சலுகையை 2024 ஜனவரி முதல் அமுல்படுத்தக் கோருகின்றனர். 

இது அமைச்சரவை தீர்மானம் என்பதால், இது குறித்து ஜனாதிபதியுடன் பேசுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், எதற்காக இந்த வேலைநிறுத்தம் தொடர்கிறது என்பது புரியவில்லை – என்றார்.
 

Leave a Reply