காங்கோவில் தேவாலயம் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கோமாண்டா நகரில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தது. அப்போது துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களுடன் தேவாலயத்துக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. உயிருக்கு பயந்து பிரார்த்தனையில் ஈடுபட்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
மேலும் அந்த கும்பல் அங்கிருந்த வீடுகள் மற்றும் கடைகளுக்கும் தீ வைத்தது. அதில் வீடுகள், கடைகள் எரிந்து சேதமானது. இந்த தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக தேவாலயம் அருகில் உள்ள மக்சோஸ்கனி கிராமத்தில்இந்த கும்பல் நடத்திய தாக்குதலில் 5 பேர் இறந்தனர்.
கோமாண்டா நகரில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோட்டையில் இருந்து வந்த இக் கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளனர். அரசுக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவ்வப் போது இவர்கள் பொதுமக்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






















