வரலாற்று நெடுந்தொடராக உருவாகியுள்ள சண்டமாருதம்
சினிமா
சிங்கப்பூரில் தமிழர்களின் வரலாற்றை மையமாகக் கொண்டு, Mediacorp சிங்கப்பூர் தேசிய தொலைக்காட்சி மற்றும் the media நிறுவனத்தின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள வரலாற்று நெடுந்தொடர் சண்டமாருதம்.
தமிழர்கள் சிங்கப்பூருக்கு எப்படி வந்தார்கள், சிங்கப்பூர் தேசிய இனங்களில் தமிழர்களும் இணைந்து, தமிழ் மொழி தேசிய மொழிகளில் ஒன்றாக எப்படி அங்கீகரிக்கப்பட்டது போன்ற வரலாற்று உண்மைகளின் பின்னணியில், நாராயண பிள்ளை, முன்ஷி அப்துல்லா, ராஃபில்ஸ் போன்ற நிஜ கதாபாத்திரங்களை வைத்து புனையப்பட்ட கற்பனை கதை இது.
கதைக்களம்
1820-களில், ஆங்கிலேயர்கள் தமிழர்களின் நெசவுத் தொழிலை சீரழித்து, இங்கிலாந்தில் இருந்து துணியை இறக்குமதி செய்ய முயன்றதால், பாரம்பரிய நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இங்கிருந்து கதை தொடங்குகிறது.
சுதந்திரப் போராட்டக் காலத்தில், ஆங்கிலேயர்கள் தமிழர்களை மனிதர்களாகக் கருதாமல், விலங்குகளைப் போல கப்பல்களில் ஏற்றி, அன்றைய மலாயாவுக்கு (இன்றைய மலேசியா) கூட்டங் கூட்டமாக அனுப்பினர். அங்குள்ள மழை காடுகளை திருத்தி ரப்பர் தோட்டங்களை உருவாக்க நம் தமிழர்களின் உழைப்பும் வேர்வையும் ரத்தம்மும் கலந்த நிலங்கள் உருவானது.
இப்படத்தில் தென்னரசு, செங்கோடன், மதுவதனி, வேலு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இவர்களுடன் சிங்கப்பூர் நடிகர்களான புரவலன், லிங்கம், நிஷா குமார், மலேசிய நடிகர்களான கோவிந்த் சிங், வினோசன், மற்றும் தமிழக நடிகர்களான மோகன் ராம், மதுமிதா, காதல் சுகுமார் ஆகியோரும் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழ் நடிகை கோகிலா மற்றும் "கிழக்குச் சீமையிலே" புகழ் அஸ்வினி ஆகியோர் அம்மா கதாபாத்திரங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாராயண பிள்ளை என்ற உண்மையான கதாபாத்திரத்தில் ப்ருத்திவி ராஜ் மற்றும் முன்ஷி அப்துல்லா கதாபாத்திரத்தில் கோவிந்த் சிங் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப அம்சங்கள்
இந்தத் தொடரின் செட் வடிவமைப்புகள் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. உடை வடிவமைப்பு உலகக்தரத்தில் உள்ளது,
1820-களின் தமிழகத்தை நம் கண்முன்னே நிறுத்தியுள்ளனர். ஒலி-ஒளி அமைப்பு, பின்னணி இசை அனைத்தும் அந்த காலத்துக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன.
இயக்குனர் முகமது அலி இப்படி ஒரு கதையை எழுதி இயக்கியதற்கு சிறப்புப் பாராட்டுகள் தேவை.
இந்தத் தொடர் இந்தியா, மலேசியா, இந்தோனேசியா எனப் பல நாடுகளின் கடல்களைக் கடந்து படமாக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான நெடுந்தொடர். சிங்கப்பூர் தேசிய தொலைக்காட்சியில் வாரம் தோறும் ஒளிபரப்பப்படுகிறது.
தமிழக மக்கள் இதை YouTube-லும் கண்டுகளிக்கலாம். சண்டமாருதம் ஒரு முக்கியமான வரலாற்று ஆவணம்.






















