ஜப்பானில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தனி பெரும்பான்மையை இழந்தது
ஜப்பானில் நடைபெற்ற நாடாளுமன்ற மேல்சபை தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி அடைந்தது. இதனால் இரு அவைகளிலும் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தனி பெரும்பான்மையை இழந்தது.
ஜப்பானில் பிரதமர் ஷிகெரு இஷிபா தலைமையிலான லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற மேல்சபையில் பெரும்பான்மை பெற 125 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஏற்கனவே 75 இடங்கள் இருந்தன. எனவே இந்த தேர்தலில் பெரும்பான்மை பெற மேலும் 50 இடங்களில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி 47 இடங்களில் மட்டும் தான் வெற்றி பெறமுடிந்தது. இதனால் ஆளுங்கட்சி இரு அவைகளிலும் தனிப்பெரும்பான்மையை இழந்தது.
முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கீழ்சபை தேர்தலிலும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தோல்வியடைந்தது.
1955-ம் ஆண்டு கட்சி தொடங்கியதில் இருந்து ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழப்பது இதுவே முதல்முறையாகும். இருப்பினும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் பதவியில் தொடர்ந்து நீடிப்பேன் என்று ஷிகெரு இஷிபா தெரிவித்துள்ளார்.























