கலிகமுவ பகுதியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து
இலங்கை
கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று (21) அதிகாலை தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது 21 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேகாலை பொலிஸ் பிரிவின் எல்லைக்குட்பட்ட கலிகமுவ பகுதியில், கேகாலையில் இருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், வேரகொடவிலிருந்து கேகாலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று (21) அதிகாலை 5:00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் கேகாலை மற்றும் வரகாபொல வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.






















