சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம் படத்தின் இசை வெளியீடு
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் மற்றும் இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன் ஆகியோர் இப்படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர்.
அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ.ஜி.ஆர் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சின்னத்தம்பி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்திருக்கிறார்.
சாண்டி ரவிச்சந்திரன் இணை தயாரிப்பாளராக இருக்கும் இந்த திரைப்படத்தை மீடியா மைண்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
ஆகஸ்ட் 1ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
இதில் படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான மகேஸ்வரன் தேவதாஸ், இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன், இயக்குநர் அனீஸ் அஷ்ரஃப், நாயகன் வெற்றி, நாயகி ஷில்பா மஞ்சுநாத், நடிகைகள் நயனா மற்றும் அனிகா, சண்டை பயிற்சி இயக்குநர் நூர், டிரெண்ட் மியூசிக் ஜித்தேஷ், பின்னணி பாடகி கரிஷ்மா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நடிகர் வெற்றி பேசியதாவது:-
சென்னை பைல்ஸ் - முதல் பக்கம்' படத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று என்னை தேர்வு செய்த இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. அவருடைய குறும்படத்தை பார்த்தேன். பார்த்ததும் நம்பிக்கை பிறந்தது.
அதில் அவருடைய திறமை பளிச்சிட்டது. அதேபோல் சொன்ன நாட்களில் சொன்னபடி படப்பிடிப்பை நிறைவு செய்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு உணர்வுப்பூர்வமான கிரைம் திரில்லர் படத்தை உருவாக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு தளத்தில் குடும்பமாக இணைந்து பணியாற்றினோம்.
அனைவரும் திரையரங்கத்திற்கு குடும்பத்துடன் வருகை தந்து பார்த்து ரசித்து பேராதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.























