வெள்ளத்தில் நின்றபடி நேரலையில் பேசிய பத்திரிகையாளர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட விபரீதம்
பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், ராவல்பிண்டியில் வெள்ளம் குறித்து நேரலையில் செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்த ஒரு பத்திரிகையாளர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
ராவல்பிண்டியில் உள்ள சாஹான் அணைக்கு அருகில் இந்த சம்பவம் நடந்தது. நிருபர் கையில் மைக் உடன் கழுத்தளவு தண்ணீரில் இருந்து பேசிக்கொண்டிருந்தார். திடீரென தண்ணீரின் ஓட்டம் அதிகரித்ததால் அவர் அடித்துச் செல்லப்பட்டார். அவரின் நிலை குறித்த தகவல்கள் இல்லை.
TRP-க்காக ஊடகங்கள் இரக்கமற்ற முறையில் நிருபர்களின் உயிரை பணயம் வைத்து வருவதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஜூன் 26 முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பாகிஸ்தானில் பரவலான சேதம் மற்றும் இறப்புகள் ஏற்பட்டுள்ளன. குறைந்தது 116 பேர் இறந்துள்ளனர் மற்றும் 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில் அதிகபட்சமாக 44 பேர் உயிரிழந்துள்ளனர். கைபர் பக்துன்க்வாவில் 37 பேரும், சிந்துவில் 18 பேரும், பலுசிஸ்தானில் 19 பேரும் உயிரிழந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, மின்சாரம் மற்றும் நீர் போன்ற அத்தியாவசிய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ராவல்பிண்டி உட்பட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன, அங்கு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.





















