முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் முன் பிணை மனு நிராகரிப்பு
இலங்கை
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தாக்கல் செய்த முன் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் குறித்த மனுவ நிராகரித்து இன்று உத்தரவிட்டுள்ளது.
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வதற்கு தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகை வழங்கி அரசாங்கத்துக்கு இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கு பிடியாணை உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையிலேயே இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 14 ஆம் திகதி முன் பிணை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதன்போது குறித்த மனுவை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்றைய தினம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு லஞ்ச ஊழல் விசாரணை குழுவுக்கு அறிவித்திருந்தார்.
இந்த மனுதொடர்பான இன்று உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மனுவை நிராகரித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய தினம் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பாக முன்னிலையான உதவி பணிப்பாளர் சுலோச்சனா ஹெட்யொராச்சி சாட்சியங்களை சமர்;ப்பித்திருந்தார்.
முன்னாள் அமைச்சர் அனுமதியின்றே குறித்த திட்டத்தினை செயற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரிகுணரத்ன முன்னிலையாகியிருந்தார்.
மணல் அகழ்வு நடவடிக்கைக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டிருந்ததாக மன்றில் தெரிவித்தார்.























