சிரியா உள்நாட்டு மோதல் நிறுத்தம் - படைகளை திரும்பப்பெற்ற அரசு
சிரியாவில் ஸ்விடா மாகாணத்தில் ட்ரூஸ் மதத்தினருக்கும், பெடொய்ன் பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து ஸ்விடா மாகாணத்துக்கு கூடுதல் அரசுப்படைகள் அனுப்பப்பட்டன. இதில் ட்ரூஸ் மதத்தினர் மீது அரசுப்படைகள் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து ட்ரூஸ் மதத்தினருக்கு ஆதரவாக இஸ்ரேல், சிரியா மீது தாக்குதல் நடத்தியது. சிரியாவின் ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தி உள்ளது.
தலைநகர் டமாஸ்கசில் உள்ள சிரியா ராணுவ தலைமையக கட்டிடம் மீது இஸ்ரேல் விமானப்படை ஏவுகணையை வீசியது. இதைதொடர்ந்து இஸ்ரேலுக்கு சிரியாவின் இடைக்கால அதிபர் அகமது அல்-ஷாரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறும்போது, "போருக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை. சவால்களை எதிர்கொண்டு எங்கள் மக்களைப் பாதுகாப்பதில் எங்கள் வாழ்க்கையை செலவிட்டுள்ளோம். சிரியா மக்களின் கண்ணியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் போராடத் தயாராக இருக்கிறோம். பொதுமக்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது" என்றார்.
இந்நிலையில் அமெரிக்கா, துருக்கி மற்றும் அரபு நாடுகளின் மத்தியஸ்தத்தின் கீழ் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இதையடுத்து சிரிய இராணுவத்திற்கும் ட்ரூஸ் படைகளுக்கும் இடையே பல நாட்கள் நீடித்த சண்டை முடிவுக்கு வந்துள்ளது.
போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, சிரிய இராணுவ படையினர் ஸ்விடா மாகாணத்திலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளனர்.
சிரிய மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கை, உள்நாட்டு மோதல் மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் 374 பேர் கொல்லப்பட்டதாக கூறுகிறது. அதிகாரப்பூர்வ எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.
சிரியாவின் இடைக்கால அதிபர் அகமது அல்-ஷாரா, ட்ரூஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் மதகுருமார்களுக்கு அப்பகுதியில் ஒழுங்கைப் பராமரிக்கும் பணியை வழங்கியதாகக் கூறினார்.






















