ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு - பா. ரஞ்சித் மீது வழக்குப்பதிவு
சினிமா
நாகை மாவட்டம், கீழ்வேளூர், வெண்மணி, விழுந்தமாவடி, காரைமேடு உள்ளிட்ட பகுதிகளில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த படத்தின் முக்கியமான கார் சேசிங் காட்சிகள் விழுந்தமாவடி பகுதியில் நேற்று எடுக்கப்பட்டன.
படக்காட்சியின் ஒரு பகுதியாக, கார் ஒன்று வேகமாக வந்து, மேலே பறந்து கீழே விழும் காட்சி எடுக்கப்பட்டது. இந்த காட்சியில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (வயது 52) ஈடுபட்டார்.
அப்போது காருடன் மேலே பறந்த அவர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில், காரின் உள்ளே சிக்கி வெளியே வர முடியாமல் மயங்கி கிடந்துள்ளார்.
இதனைக் கண்ட இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் உடனடியாக மோகன்ராஜை மீட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மோகன்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்தநிலையில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்த விவகாரத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை. அலட்சியமாக செயல்பட்டது, கவனக்குறைவாக இருந்தது உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்புதி செய்யப்பட்டுள்ளது.





















