ரசிகர்களுக்கு தெரியாத சரோஜா தேவியின் மறுபக்கம்
சினிமா
சரோஜாதேவி சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் அவரை சினிமா உலகில் உச்சத்துக்கு கொண்டு சென்ற படம் 'நாடோடி மன்னன்' தான். நாடோடி மன்னன் படத்துக்கு பல தனிச்சிறப்புகள் உண்டு.
நாடோடி மன்னன் எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய முதல் திரைப்படம் ஆகும்.
இந்த படத்தில் முதல் கதாநாயகி பானுமதி. 2-வது கதாநாயகியாக சரோஜா தேவி. இந்த படத்தில் கதாநாயகியாக சரோஜா தேவியை நடிக்க வைக்க சில எதிர்ப்புகள் கிளம்பினாலும் எம்.ஜி.ஆர் அவரை கதாநாயகி ஆக்குவதில் உறுதியாக இருந்தார்.
தமிழ் சினிமாவில் முதல் வண்ண திரைப்படம் 'அலிபாபாவும் 40 திருடர்களும்'. அதே நேரத்தில் பகுதி நேர முதல் வண்ண திரைப்படம் நாடோடி மன்னன்.
நாடோடி மன்னன் படம் முதல் பாதிக்கும் மேல் கருப்பு வெள்ளை திரைப்படம், பாதிக்கு பிறகு வண்ண திரைப்படமாக வெளியானது.
இந்த படம் சரோஜா தேவியின் அறிமுக காட்சியுடன் வண்ணத்திரைப் படமாக ஆரம்பமாகும். 'கண்ணில் வந்த மின்னல் போல் காணுதே' என்ற பாடல் காட்சியுடன் சரோஜா தேவி அறிமுகமாவார். தண்ணீருக்கு அடியில் நின்ற படி எம்.ஜி.ஆர், சரோஜா தேவி பாடும் வகையில் இந்த பாடல் காட்சி அமைந்திருக்கும்.
சரோஜா தேவி அறிமுகமான இந்த பாடல் காட்சி பட்டி தொட்டி எங்கும் ரசிகர்களால் கை தட்டி விசில் அடித்து கொண்டாடப்பட்டது. அதன் பிறகு சரோஜா தேவி தமிழ் திரைப்பட உலகில் தவிர்க்க முடியாத கதாநாயகி ஆனார்.
ரசிகர்களுக்கு தெரியாத குடும்ப வாழ்க்கை
சரோஜாதேவியின் இயற்பெயர் ராதாதேவி கவுடா. இவர் பெங்களூரில் 1938-ம் ஆண்டு ஜனவரி 7-ந்தேதி பிறந்தார். அவரது தந்தை பைரப்பா காவல் துறையில் பணிபுரிந்தார். அவரது தாயார் ருத்ரம்மா. அவர்களின் 4-வது மகள்தான் சரோஜாதேவி.
சரோஜாதேவிக்கு சரஸ்வதிதேவி, பாமாதேவி, சீதாதேவி என்ற 3 அக்காவும் வசந்தா தேவி என்ற ஒரு தங்கையும் உள்ளனர். இளம் பருவத்தில் சரோஜாதேவி தனது தந்தையுடன் அடிக்கடி ஸ்டுடியோக்களுக்கு செல்வார்.
சினிமாவுக்காக நடனம் கற்றுக் கொண்டார். சினிமா படங்களில் நீச்சல் உடைகள் மற்றும் அறைகுறை ஆடைகள் அணிவதை தவிர்த்தார். தமிழ் திரையுலகில் 60 முதல் 70 வரையான கால கட்டங்களில் 17 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்த சரோஜாதேவி எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் ஆகிய 3 பேருடனும் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர். ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைகளை பெற்றவர் நடிகை சரோஜாதேவி.
இவர் ராதாதேவி என்ற பெயரை திரை உலகிற்காக சரோஜாதேவி என்ற பெயரை மாற்றிக் கொண்டு ஹொன்னப்ப பாகவதர் தயாரித்த "மகாகவி காளிதாஸ்" என்ற கன்னடப் படத்தில் (1955) கதாநாயகியாக அறிமுகம் ஆனார். முதல் படமே அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது.
கன்னடப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிப் புகழ் பெற்ற சரோஜாதேவிக்கு தமிழ்நாட்டில் பெரிய புகழைத் தேடித்தந்த படம் எம்.ஜி.ஆரின் "நாடோடி மன்னன்" இதன் பின்னர் ஸ்ரீதரின் "கல்யாணப் பரிசு" (1959) படத்தில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். சரோஜாதேவி 1967-ம் ஆண்டு மார்ச் 1-ந்தேதி அன்று எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயர் ஸ்ரீ ஹர்ஷாவை திருமணம் செய்து கொண்டார். அந்த நேரத்தில் அவர் நிதி நெருக்கடி மற்றும் வருமான வரி சிக்கல்களை எதிர் கொண்டார்.
இந்த சிக்கல்களை சமாளிக்க அவரது கணவர் உதவினார். மேலும் அவரது நிதிகளை எவ்வாறு நிர்வகிப்பது என்று அவருக்குக் கற்றுக் கொடுத்தார். சரோஜாதேவி கணவர் ஸ்ரீஹர்ஷா 1986-ல் ஆண்டு இறந்தார்.






















