Reel ஹீரோவிற்காக உயிரை விட்ட Real ஹீரோ
சினிமா
நாகை மாவட்டம், கீழ்வேளூர், வெண்மணி, விழுந்தமாவடி, காரைமேடு உள்ளிட்ட பகுதிகளில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த படத்தின் முக்கியமான கார் சேசிங் காட்சிகள் விழுந்தமாவடி பகுதியில் நேற்று எடுக்கப்பட்டன.
படக்காட்சியின் ஒரு பகுதியாக, கார் ஒன்று வேகமாக வந்து, மேலே பறந்து கீழே விழும் காட்சி எடுக்கப்பட்டது. இந்த காட்சியில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (வயது 52) ஈடுபட்டார்.
அப்போது காருடன் மேலே பறந்த அவர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில், காரின் உள்ளே சிக்கி வெளியே வர முடியாமல் மயங்கி கிடந்துள்ளார்.
இதனை கண்ட இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் உடனடியாக மோகன்ராஜை மீட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மோகன்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் அந்த ஸ்டண்ட் காட்சி செய்யும் போது கார் விழுகும் போது அவரது மார்பு பகுதியில் கூர்மையான பொருள் குத்தியதால் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
ஸ்டண்ட் செய்யும்போது மோகன்ராஜ் காருடன் பறந்து சென்று கீழே விழுந்து உயிரிழக்கும் பதைபதைக்க வைக்கும் காட்சிகளும், இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் காரில் சிக்கியவரை மீட்கும் காட்சிகளும் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இச்சம்பவம் திரைத்துறையினரை சோகத்தில் அழ்த்தியுள்ளது. திரைத்துறை சேர்ந்த பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து திரையுலகில் ஸ்டண்ட் செய்யும் மனிதர்கள் மற்றும் மாஸ்டர்கள் போதுமான பாதுகாப்பு கருவியில்லாமல் இறந்து கொண்டே தான் இருக்கின்றனர். இதற்கான எந்த ஒரு முயற்சியையும் தமிழ் திரையுலகம் முன்னெடுக்கவில்லை.
மக்களின் சந்தோஷத்திற்காக சினிமாத்துறையில் ஸ்டண்ட் மேன்கள் வேலைப்பார்க்கின்றனர். நமக்கு பிடித்த ஹீரோ சண்டை காட்சியில் குதிப்பதும் பறப்பதும் , காரை வேகமாக ஓட்டுவதை பார்த்து நாம் திரையரங்கிள் கொண்டாடுகிறோம். ஆனால் இதற்கு பின்னால் முகம் தெரியாமல் பல நபர்களின் உழைப்பு இருக்கிறது. ஆனால் நாம் அதனை பெரும்பாலும் மறந்து விடுகிறோம்.
கதாநாயகர்களுக்கு இணையாக வேலைப்பார்க்கும் இவர்கள், குறிப்பாக கதாநாயகனைவிட நன்றாக சண்டை மற்றும் ஸ்டண்ட் செய்யக்கூடியவர்களுக்கு இந்த திரைத்துறையில் சரியான நேரத்தில் அவர்களுக்காக ஊதிய தொகையை கொடுப்பதில்லை. ஏன் இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு சில நேரங்களில் சரியான உணவு கூட கிடைப்பதில்லை. ஆனால் இதை எல்லாம் பொருட்படுத்தாமல் இந்த சினிமாத்துறை பிடித்ததால் மக்களை மகிழ வைக்கவேண்டும் காட்சிகள் அழகாக வர வேண்டும் என்ற மனநிலையுடன் இந்த ஸ்டண்ட் மேன்கள் வேலைப்பார்த்து வருகின்றனர்.
இம்மாதிரியான ஒரு காட்சிக்காக உயிரை பணயம் வைத்து செய்ய வேண்டுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனையெல்லாம் கருத்தில் கொண்டு வரும் காலங்களில் இத்தகையான இறப்பை சினிமாத்துறை தவிர்க்க வேண்டும்.























