அமைச்சர் துரைமுருகன் பத்தி சொல்ல வந்ததே வேற, ஆனா மாட்டிகிட்டேன் - வேள்பாரி நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்
சினிமா
விகடன் பிரசுரத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது.
இந்நிலையில், வேள்பாரி புத்தகத்தின் வெற்றிப் பெருவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், 'வேள்பாரி 1,00,000' வெற்றிச் சின்னத்தை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
நிறைய சொல்ல வேண்டும் என அறிவு சொல்லும். எப்படிப் பேசவேண்டும் என திறமை சொல்லும். எவ்வளவு பேச வேண்டும் என அரங்கம் சொல்லும். எதைப் பேசவேண்டும், பேசக்கூடாது என அனுபவம் சொல்லும்.
கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு நிகழ்ச்சியில் ஓல்டு ஸ்டூடண்ஸ் குறித்துப் பேசினேன். அரங்கத்துல இருக்குற எல்லாரும் சிரிச்சதால நான் பேசணும்னு நினைச்சதை மறந்துட்டேன்.
இந்த விழாவுக்காக சு.வெங்கடேசன் என்னை அப்ரொச் பண்ணிய விதம் ரொம்ப பிடித்திருந்தது.
விகடனில் அதிகம் கிழித்தது என்னைத்தான், இருந்தாலும் நட்பில் எந்த விரிசலும் இல்லை.
சிவக்குமாரும் கமல்ஹாசனும் சிறந்த அறிவாளிகள்... ஆனா, என்னை ஏன் கூப்பிட்டாங்க? இந்த 75 வயசுலயும் கூலிங் கிளாஸ் போட்டு ஸ்லோ மோஷன்ல நடந்து வர என்ன ஏன்பா விழாவுக்கு கூப்டீங்க?
வேள்பாரி புத்தகத்தை நான் இன்னும் முழுசா படிக்கல. வேள்பாரி திரைப்படமாக உருவாகும் என காத்திருக்கிறேன்.
ஓய்வுக் காலத்தில் நல்ல புத்தகங்களைப் படிக்க விருப்பம் உள்ளது. அதற்காக வேள்பாரி புத்தகத்தை எடுத்து வைத்துள்ளேன்.
எல்லோரும் காத்திருப்பது போல நானும் வேள்பாரி திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.























