மோட்டார் சைக்கிள்கள் மூலம் போதைப்பொருட்களை கடத்திய மூவரிடம் விசாரணை முன்னெடுப்பு
இலங்கை
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மூலம் போதைப் பொருட்களை கடத்திய நிலையில் கைதான மூன்று சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குபட்ட அட்டாளைச்சேனை டீன் மாவத்தை ஊடாக போதைப் பொருட்கள் கடத்தல் மேற்கொள்ளப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய பொலிஸார் நேற்று (6) சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இதன் போது அப்பகுதியினால் இரண்டு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த மூவரை கைது செய்த அக்கரைப்பற்று பொலிஸார் அவர்களிடம் இருந்து போதைப் பொருட்களை மீட்டுள்ளனர்.
இதன் போது 84 கிராம் 620 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளினை வைத்திருந்த சந்தேக நபர் மன்னார் நீதிமன்றத்தின் திறந்த பிடியாணை பெற்ற நபர் என்பது தெரியவந்தது.
அத்துடன் மற்றுமொரு சந்தேக நபரிடம் இருந்து 24 கிராம் 940 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருரும் மூன்றாவது சந்தேக நபரிடம் இருந்து 31 கிராம் 5 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டது.
அத்துடன் கைதான மூன்று சந்தேக நபர்கள் மற்றும் அவர்கள் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் மீட்ட பொலிஸார் சட்ட நடவடிக்கைக்காக அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.























