ரஷியா உடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயார் - ஆனால் நிபந்தனைகள் குறித்த தெளிவு தேவை என்கிறது உக்ரைன்
உக்ரைன்- ரஷியா இடையில் அமைதி ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட நேரடி அமைதி பேச்சுவார்த்தை துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது. இதில் இருநாட்டு அதிகாரிகளும் நேருக்குநேர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கும் குறைவாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை. இருநாடுகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளை பரிமாற்றிக்கொள்ள ஏற்றுக்கொண்டன. இதனைத் தொடர்ந்து கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது.
இந்த நிலையில் வருகிற திங்கட்கிழமை 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ரஷியா பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையை உக்ரைன் ஏற்றுக்கொள்ளுமா? என்பது தெரியவில்லை. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் டாப் ஆலோசகர், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் டாப் ஆலோசகர் ஆண்ட்ரிய் யெர்மக் கூறியதவாது:-
அடுத்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்து கொள்ள உக்ரைன் தயாராக இருக்கிறது. ஆனால், நாங்கள் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புகிறோம். இதன் அர்த்தம், ரஷியாவின் நிபந்தனையை பெறுவது முக்கியமானது. இன்னும் மூன்று நாட்கள் உள்ளது. நிபந்தனைக்கான வரைவை தயாரித்து அனுப்புவதற்கு போதுமான நேரம் உள்ளது.
இவ்வாறு யெர்மார்க் தெரிவித்துள்ளார்.
3 வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் ரஷியா- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விரும்புகிறார். முதற்கட்டமாக 30 நாள் போர் நிறுத்தத்திற்கான பரிந்துரையை அமெரிக்கா வழங்கியது.
மேற்கத்திய நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள் பெறுவதை உக்ரைன் நிறுத்த வேண்டும் என ரஷியா முக்கிய நிபந்தனையாக முன் வைக்கிறது. அதேவேளையில் ரஷியா போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையை தாமதப்படுத்த விரும்புகிறது. உக்ரைன் நாட்டின் பகுதிகளை மேலும் கைப்பற்ற விரும்புகிறது என மேற்கத்திய நாடுகள் ரஷியாவை குற்றம்சாட்டி வருகின்றன.






















