கூட்டத்தில் சிக்கிய பெண்கள்; எம்.ஜி.ஆர் செய்த தரமான சம்பவம்!
சினிமா
திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் சைக்கிள் செயினையும், சோடா பாட்டிலையும் ஆயுதங்களாக மாற்றி, மிகப்பெரிய வன்முறையை அன்றைய ஆளுங்கட்சியான தி.மு.க கட்டவிழ்த்துவிட்டது.”
தமிழ்ப் பத்திரிகை உலகில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவருபவர் மூத்த பத்திரிகையாளரும், திராவிட இயக்க ஆய்வாளருமான துரைகருணா. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மீதான ஈர்ப்பு காரணமாக அ.தி.மு.க சார்ந்த பல்வேறு வார இதழ்களிலும், நாளேடுகளிலும் பணியாற்றிய துரைகருணா, 40 ஆண்டுகளுக்கு மேலாக தலைமைச்செயலகம், சட்டமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளைச் சேகரித்து, பல்வேறு பத்திரிகைகளுக்கும் வழங்கயுள்ளார்.
தொலைக்காட்சி விவாதங்களிலும் தொடர்ச்சியாகப் பங்கேற்றுவரும் துரைகருணா, தனது பத்திரிகை உலக அனுபவங்களையும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களுடன் பழகிய நினைவுகளையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
“பத்திரிகையாளராக ஆக வேண்டுமென்ற விருப்பம் உங்களுக்கு ஏற்பட்டது எப்படி?”
“பள்ளிப் பருவத்திலேயே நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. குறிப்பாக, திராவிட இயக்கங்கள் தொடர்பான புத்தகங்கள் மீது எனக்கு ஈர்ப்பு அதிகம். நான் கல்லூரிக்கெல்லாம் செல்லவில்லை. பள்ளிப் படிப்பை முடித்தவுடன், பத்திரிகையில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. 1972-ம் ஆண்டு தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டு, அ.தி.மு.க தொடங்கப்பட்ட காலத்தில், ‘அண்ணாவின் இதயக்கனி’ என்ற வார இருமுறை இதழ் மதுரையிலிருந்து வெளிவந்தது. அந்த இதழுக்கு தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றிய கவிதைகள், கட்டுரைகள், துணுக்குகளை எழுதத் தொடங்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. என்னுடைய எழுத்துகளுக்கு மதிப்பூதியமாக ஐந்து ரூபாய், பத்து ரூபாய் தருவார்கள். அந்த காலத்தில், அது எனக்கு பெரிய விஷயமாக இருந்தது.”
”திராவிட இயக்கம் தொடர்பான வாசிப்புதான் உங்களை பத்திரிகைத் துறைக்குக் கொண்டுவந்ததா?”
“நிச்சயமாக. 1978-80 காலகட்டத்தில் சென்னைக்கு வந்தேன். அனைத்துலக எம்ஜிஆர் மன்றத்தின் தலைவராக இருந்த முசிரிபுத்தன் அவர்கள் ‘புரட்சியார் ரசிகன்’, ‘நாடோடி மன்னன்’ என்று இரண்டு வார இதழ்களை நடத்தினார். அந்தப் பத்திரிகைகளில் எழுத்துப் பிழைப் பார்ப்பது, தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றிய கட்டுரைகள் எழுதுவது என்று பணியாற்றினேன். பிறகு, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றம் சார்பாக ‘மன்ற முரசு’ என்ற புதிய பத்திரிகை 1984 ஜனவரி 17-ம் தேதி வெளிவந்தது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், மன்ற முரசு பத்திரிகையை தலைவர் எம்.ஜி.ஆர் வெளியிட, கலையுலக இயக்குநர் கே.பாக்யராஜ் பெற்றுக்கொண்டார். அந்த மேடையில்தான், ‘என்னுடைய கலையுலக வாரிசு கே.பாக்யராஜ்’ என்ற அறிவிப்பை எம்.ஜி.ஆர் வெளியிட்டார். அந்தப் பத்திரிகையில் பணியாற்றினேன்.
அதன் பிறகு, அ.தி.மு.க சார்பில் வெளிவந்த அத்தனை பத்திரிகைகளிலும் பணியாற்றியிருக்கிறேன். எம்.ஜி.ஆர் நிறுவனராக இருந்த ‘அண்ணா’ பத்திரிகை, ‘மன்ற முரசு’, சு.திருநாவுக்கரசு தொடங்கிய ‘பொன்மனம்’, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கிய ‘நமது எம்.ஜி.ஆர்’ உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றியிருக்கிறேன். எனக்கு திராவிட இயக்க சிந்தனையும், உணர்வும் இருந்ததால், பத்திரிகை பணியோடு சேர்த்து, இயக்கம் சார்ந்தும் பயணிக்க வேண்டும் என்ற கண்ணோட்டம் எனக்கு இருந்தது. ‘தேசியமும் திராவிடமும்’, ‘ஒரே ஒரு எம்.ஜி.ஆர்’, ‘எம்.ஜி.ஆர் வாழ்வும் நெறியும்’, ‘எம்.ஜி.ஆர் அரசியல் பாதை’, ‘இலங்கைப் பிரச்னையில் எம்.ஜி.ஆர்’ என்று நூல்களையும் எழுதியிருக்கிறேன்.”
“நீங்கள் பல்வேறு பத்திரிகைகளுக்குத் தலைமைச் செயலக செய்தியாளராகப் பணியாற்றியிருக்கிறீர்களே?”
“கடந்த 45 ஆண்டுகளாக தலைமைச்செயலகத்தில் சட்டப்பேரவை நடவடிக்கைகளை நேரடியாகப் பார்த்து, பல்வேறு பத்திரிகைகளுக்குச் செய்திகளை வழங்கியிருக்கிறேன். குறிப்பாக, அகில இந்திய வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றுக்கு 1980-கள் தொடங்கி ‘சட்டப்பேரவையில் இன்று’ என்ற செய்திக்குறிப்புகளை கொடுத்துவருகிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி, ‘வெற்றிமாலை’ என்ற பெயரில் ஒரு மாலை இதழைத் தொடங்கினார். அதில் பணியாற்றினேன். ‘மாலைச்சுடர்’, ‘நியூஸ் டுடே’ பத்திரிகைகளிலும் தலைமைச்செயலக செய்தியாளராகப் பணியாற்றியிருக்கிறேன். இன்று எனக்கு 71 வயது ஆகிறது. ஆரம்பக் காலம் தொடங்கி இன்றுவரை, 60 ஆண்டுகள் பத்திரிகைத் துறையில் இருந்திருக்கிறேன்.”
“முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், மு.கருணாநிதி ஆகியோரிடம் எப்போது உங்களுக்கு அறிமுகம் கிடைத்தது?”
“1989-ம் ஆண்டு, கலைஞர் கருணாநிதி அவர்கள் சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வராக வந்திருந்தார். அன்றைக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவராக இருந்தேன். அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவராக டி.எஸ்.ரவீந்திரதாஸ் இருந்தார். சென்னையில் சங்கத்தின் மாநாட்டுக்கு முதல்வர் கருணாநிதியை அழைப்பதற்காகவும், அழைப்பிதழ் கொடுப்பதற்காகவும் நாங்கள் சென்றிருந்தோம். அப்போது, ‘இவர், எங்கள் சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவர் துரைகருணா’ என்று டி.எஸ்.ரவீந்திரதாஸ் அறிமுகப்படுத்தினார். உடனே, என் பக்கம் திரும்பி, லேசாகப் புன்னகைத்த முதல்வர் கருணாநிதி, ‘ஓ... அண்ணாவில் பாதி, என்னில் பாதி எடுத்து வச்சிக்கிட்டாரோ?’ என்று கேட்டார். என் பெயர் குறித்து எனக்கே அதுவரை அப்படியொரு பார்வை இருக்கவில்லை. அவர் சொன்ன பிறகுதான் எனக்கே தோன்றியது.”
“முதன்முதலாக எம்.ஜி.ஆரை எப்போது சந்தித்தீர்கள்?”
“1973-ம் ஆண்டு, திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில், செய்தி சேகரிப்பாளராகவும், கட்சி உணர்வாளராகவும் அந்தப் பகுதி முழுவதும் பயணித்தேன். வத்தலக்குண்டு நகரத்தில் எம்.ஜி.ஆரின் தொண்டரான வத்தலக்குண்டு ஆறுமுகம் படுகொலை செய்யப்பட்டார். அதைக் கண்டித்து வத்தலகுண்டுவில் நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் எம்.ஜி.ஆர் கலந்துகொண்டார். அப்போதுதான் அவர் மீது எனக்கு ஓர் ஈர்ப்பு வந்தது. தலைவர் வாழ்கிற சென்னைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணமும் அப்போது ஏற்பட்டது.
அ.தி.மு.க-வின் மாணவர் அமைப்பில் இணைந்து பணியாற்றிக்கொண்டிருந்தேன். 1974-ம் ஆண்டு திருச்சிக்கு எம்.ஜி.ஆர் வந்திருந்தபோது, அவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார் கல்லுக்குழி கந்தன். ‘உங்கள் பெயர் என்ன?’ என்று தலைவர் கேட்டார். ‘துரை கருணா’ என்றேன். ‘முழுப் பெயரையும் சொல்லுங்கள்’ என்றார். ‘துரை கருணாநிதி’ என்றேன். உடனே, பக்கத்தில் இருந்த கல்லுக்குழி கந்தனைப் பார்த்துவிட்டு, ‘ஓ நம்மகிட்டேயும் ஒரு கலைஞரைக் கொண்டுவந்துட்டே’ என்று சொல்லிவிட்டு, தலைவர் பலமாகச் சிரித்தார்."
“எம்.ஜி.ஆர் வாழும் சென்னைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள். அதற்கு முன்பு எம்.ஜி.ஆருடன் நேரடியாக உரையாடும் வாய்ப்பைப் பெற்றுவிட்டீர்கள்...”
“அந்தச் சந்திப்பால் தலைவர் எம்.ஜி.ஆர் மீதான ஈர்ப்பு இன்னும் அதிகமானது. அதன் பிறகுதான், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர் முசிறி புத்தன் அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டு, சென்னைக்கு வந்தேன். முதலில், முசிறி புத்தனுடைய அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக இருந்தேன். பல்வேறு பத்திரிகைகளிலும் தலைவரைப் பற்றி வரும் செய்திகளை எடுத்துப் பத்திரப்படுத்துவதுதான் என்னுடைய முக்கிய வேலையாக இருந்தது.
அப்போதுதான், ‘தாய்’ பத்திரிகை தொடங்குவதற்கான வேலைகள் நடைபெற்றன. அங்கு போனால் எழுதுவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்று நினைத்தேன். அதை முசிறிபுத்தனிடம் சொன்னபோது, ‘நீ இங்கே இரு... நாம் பத்திரிகை தொடங்குவோம்’ என்றார். அதன் பிறகுதான், ‘மன்ற முரசு’ பத்திரிகை தொடங்கப்பட்டது.
அதன் பிறகு, 1982-ல் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி என்ற புதிய அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. அதன் முதல் தலைவரே முசிறி புத்தன்தான். அதன் முதல் அலுவலக நிர்வாகியாக தலைமைக்கழகத்தில் பணியாற்றினேன். 1984-க்குப் பிறகு முழு நேரப் பத்திரிகையாளராக மாறிவிட்டேன்.”
“எம்.ஜி.ஆர் தேர்தல் பிரசாரம் போன்ற பயணங்கள் சென்றபோது, நீங்கள் அவருடன் சென்றிருக்கிறீர்களா?”
“1973 திண்டுக்கல் மக்களவைத் இடைத்தேர்தலில்தான் தலைவருக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. 1973-ம் ஆண்டு மே மாதம் ஒரு நாள் எம்.ஜி.ஆரின் பொதுக்கூட்டம். மாலை 4 மணிக்கு தலைவர் வருவதாக அறிவிப்பு. ஆனால், மதியம் 12 மணியிலிருந்து ஒரே கூட்டம். அவர் வந்ததோ, அதிகாலை 4 மணி. இதோ புரட்சித்தலைவர் வந்துவிட்டார் என்ற அறிவிப்பு வந்தவுடன் ஒட்டுமொத்த கூட்டமும் ஆர்ப்பரித்தது. நாலாபுறமும் மக்கள் திரண்டு வருகிறார்கள்.
தலைவரின் வாகனம் மேடைக்கு அருகிலேயே வர முடியாத அளவுக்கு கூட்டம். காவல்துறையினரும், கட்சிக்காரர்களும் எப்படியோ கூட்டத்தை ஒதுக்கி, மேடைக்கு அருகில் வேனை கொண்டுவந்துவிட்டார்கள். ஆனாலும், வேனிலிருந்து கீழே இறங்கி மேடைக்குச் செல்ல முடியாத நிலை. அப்போது, திடீரென்று வேன் மீது ஏறிய தலைவர், அப்படியே பேனட் மீது குதித்து, வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு, அங்கிருந்து மேடைக்கு ஜம்ப் பண்ணிவிட்டார். விசில் சத்தமும், வாழ்த்தொழியும், கைதத்தட்டலும் அடங்க பத்துப் பதினைந்து நிமிடங்கள் ஆகிவிட்டன.
அதன் பிறகு, மைக்கை கழற்றி கையில் வைத்துக்கொண்டு, மேடையில் நாலாபுறமும் நடந்தவாறே பேசினார். அந்தக் காலகட்டத்தில், ‘உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வெளியிட முடியாது. அது தீக்கிரையாகிவிட்டது. அந்தப் படம் வெளிவந்தால், நான் புடவை கட்டிக்கொள்கிறேன்’ என்று மதுரையைச் சேர்ந்த ஒரு பிரமுகம் சவால் விட்டிருந்தார்.
எம்.ஜி.ஆர் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே, ‘உலகம் சுற்றும் வாலிபன் எப்போது வெளிவரும்?’ என்று மக்கள் மத்தியிலிருந்து கேள்வி வருகிறது. அதற்கு, ‘உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வெளியிட்டால், நீங்கள் படம் பார்ப்பீர்களா, தேர்தல் வேலை பார்ப்பிர்களா?’ என்று எம்.ஜி.ஆர் கேட்டார். அதற்கு, ‘படத்தைப் பார்த்துவிட்டு, பல மடங்கு உற்சாகத்துடன் வேலை பார்ப்போம்’ என்று கூட்டத்திலிருந்து பதில் வருகிறது.
உட,னே, ‘உலகம் சுற்றும் வாலிபன் வருவான்... விரைவில் வருவான்’ என்று எம்.ஜி.ஆர். சொன்னார். அதற்கு, ஒட்டுமொத்த கூட்டமும், ‘தேதி... தேதி’ என்று கத்துகிறது. ‘மே மாதம் 11-ம் தேதி உலகம் சுற்றும் வாலிபன் வருவான்’ என்றார் எம்.ஜி.ஆர். அவர் சொன்னதுபோலவே, மே 11-ம் தேதி உலகம் சுற்று வாலிபன் வெளிவந்தது.“
“திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் எப்படி நடைபெற்றது?”
“ஆளுங்கட்சியான தி.மு.க-வால் மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. சைக்கிள் செயினையும், சோடா பாட்டிலையும் ஆயுதங்களாக தி.மு.க முதன்முதலில் பயன்படுத்தியதுதான் அந்தத் தேர்தலில்தான். அதையெல்லாம் மீறி, வரலாற்றில் இல்லாத ஒரு வெற்றியை அ.தி.மு.க பெற்றது. மத்தியில் ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரஸ், மாநிலத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க., தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அ.தி.மு.க மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கட்சி தொடங்கப்பட்டு ஆறு மாதங்கள்தான் ஆகியிருந்தன. வேட்பாளரும், புதிய சின்னமும் அறிவிக்கப்ட்டு 20 நாள்கள்தான் ஆகியிருந்தன.
மொத்தம் பதிவான வாக்குகள் 5 லட்சத்து 42 ஆயிரம். அதில், 2 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகளை அ.தி.மு.க வேட்பாளர் மாயத்தேவர் பெற்றார். ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றிபெற்றார். அன்றைக்கு பத்தாயிரம் வாக்குகள் குறைந்திருந்தால், தி.மு.க டெபாசிட் தொகையை இழந்திருக்கும். தி.மு.க முன்றாவது இடத்துக்குப் போய்விட்டது.
இரண்டாவது இடத்தை ஸ்தாபன காங்கிரஸின் என்.எஸ்.வி.சித்தன் பிடித்தார். தி.மு.க-வின் பணபலம், படைபலம் ஆகியவற்றைத் தாண்டி, இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்தது அ.தி.மு.க பெற்ற வெற்றி. இதை நான் அருகிலேயே இருந்து பார்த்ததால், எனக்கு அது மிகப்பெரிய பிரமிப்பாக இருந்தது.”
“எம்.ஜி.ஆர் கலந்துகொண்ட பொதுக்கூட்டங்களில் உங்களுக்கு மறக்க முடியாதது எது?”
“உசிலம்பட்டியில் ஒரு பொதுக்கூட்டம். அந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, எம்.ஜி.ஆரை எதிர்த்து போட்டியிடும் பி.கே.மூக்கையா தேவரைச் சந்திக்க வேண்டுமென்று எம்.ஜி.ஆர் விரும்புகிறார். எந்தவித அறிவிப்பும் இல்லாமல், மூக்கையா தேவரின் வீட்டுக்கு எம்.ஜி.ஆர் செல்கிறார். எப்படியோ தகவல் தெரிந்து சுற்றுவட்டார கிராம மக்கள் திரண்டு வந்துவிட்டார்கள். திரும்பி வர முடியாத அளவுக்கு வழிநெடுக பெரும் கூட்டம். அதன் பிறகு, உசிலம்பட்டியல் பொதுக்கூட்டம் தொடங்குகிறது. எம்.ஜி.ஆர் பேசத் தொடங்கி, இரண்டாவது நிமிடத்தில் மேடையை நோக்கி சரமாரியாக கற்களும், கம்புகளும் வீசப்படுகின்றன. மேடையில் இருந்த நிர்வாகிகள் தலைவரைச் சுற்றிப் பாதுகாப்பாக நின்றுகொண்டனர்.
அப்போது, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான ‘ஸ்டண்ட்’ கே.சி.மாயன், மேடைக்குக் கீழே கம்பை எடுத்து சிலம்பம் சுற்ற ஆரம்பித்துவிட்டார். குறைந்த எண்ணிக்கையில் போலீஸ். இருந்ததால், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. எனவே, ‘இன்றைக்கு நிலைமை சரியில்லை. இதே இடத்தில் நாளை வந்து நான் பேசுவேன்’ என்று அறிவித்த எம்.ஜி.ஆர்., ‘இன்று என்னைப் பாதுகாப்பதற்காகக் களமாடிய ஸ்டண்ட் கே.சி.மாயனை, அன்பு கே.சி.மாயன் என்று அழைக்கிறேன்’ என்றார். அறிவித்தபடியே, மறுநாள் அதே இடத்துக்கு வந்து எம்.ஜி.ஆர் பேசிவிட்டுச் சென்றார்.
மதுரை முனிச்சாலையில் நடைபெற்ற கூட்டமும் மறக்க முடியாதது. வைகை ஆற்றுப்பகுதியில்தான் கூட்டம் பெற்றது. கடல் மாதிரி மக்கள் திரண்டிருந்தார்கள். தி.மு.க ஆட்சியில் மின்தட்டுப்பாட்டைக் கண்டித்து அனைத்துக்கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் அது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., சி.பி.எம் சார்பில் பி.ராமமூர்த்தி, சி.பி.ஐ சார்பில் எம்.கல்யாணசுந்தரம், பார்வர்டு பிளாக் சார்பில் மூக்கையா தேவர். காங்கிரஸ் சார்பில் அனந்தநாயகம் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.
கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. எந்தத் தலைவர்களாலும், பேச முடியாத அளவுக்கு ஒரே ஆரவாரம். எம்.ஜி.ஆர் மைக்கைக் கழற்றி கையில் பிடித்தவாறு பேசினார். ‘இது அனைத்துக்கட்சி கூட்டம். வந்திருக்கும் மற்ற கட்சிகளின் தலைவர்களை மதிக்க வேண்டும். தி.மு.க ஆட்சியின் கொடுமைகளைத் தோலுரித்துக்காட்டுவதற்காக அவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களின் கருத்துக்களை அமைதியாகக் கேட்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.
கூட்டம் முடிவடையும் தறுவாயில், ‘இங்கு வந்திருக்கிற ஆண்களுக்கு ஒரு முக்கியமான தகவலைச் சொல்ல விரும்புகிறேன். அதனால், முதலில் பெண்கள் கூட்டத்திலிருந்து வெளியே செல்லுங்கள்’ என்றார் எம்.ஜி.ஆர். தலைவர் என்ன சொல்லப்போகிறார் என்று எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தனர்.
அரை மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் மைக்கைப் பிடித்த எம்.ஜி.ஆர்., ‘இப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. பெண்கள் எல்லோரும் பாதுகாப்பாக வீடு போய்ச் சேர வேண்டும். அதனால்தான், அவர்களை முதலில் அனுப்பினேன்’ என்றார். கட்டுக்கடங்காத அந்தக் கூட்டத்தில் சிக்கிக்கொண்டு பெண்கள் சிரமப்பட்டுவிடக்கூடாது என்ற யோசனையுடன பெண்களை முதலில் வெளியேறச் சொல்லியிருக்கிறார். தலைவர் எம்.ஜி.ஆர் செய்த அந்த சம்பவம், அந்தக் காலகட்டத்தில் ஒரு பேசுபொருளாக மாறியது.”























