• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள சீன முதலீட்டாளர்கள் ஆர்வம்

இலங்கை

தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையான வேலைத்திட்டத்தை கருத்திற் கொண்டு இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு  சீன முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தியுள்ளதாக   சீன மக்கள் குடியரசின் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் வங் வென்டாவோ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன மக்கள் குடியரசின் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் வங் வென்டாவோ ஜனாதிபதி அலுவலகத்தில்  நேற்றைய தினம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது ”இலங்கையில் தற்போது  நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் செயல்படுத்தும் வெளிப்படையான வேலைத்திட்டம் காரணமாக சீன முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிவித்த அமைச்சர், 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுடனான இந்த விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மேலும் உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் சவாலான காலகட்டத்தில் இருநாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில், வர்த்தகம் மற்றும் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், உலகளாவிய பொருளாதார ஸ்திரமின்மையை எதிர்கொள்ளும் போது இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்க சீனா அரப்பணிப்புடன் செயற்படுவதாகவும்  சீன வர்த்தக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது சீன அரசாங்கத்தின் ஆதரவுடன் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக நிறைவுசெய்தல் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும்  கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply