• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் - சர்வதேச தலையீடு இன்றி விசாரணை முன்னெடுக்கப்படும்

இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச தலையீடுகளை அனுமதிக்கப்போவதில்லை என லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பின்னணியை ஆராய்வதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பும் பெற்றுக்கொள்ளப்படுமென எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்திருந்த நிலையில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இன்று சபையில் மாறுபட்ட நிலைப்பாட்டினை முன்வைத்துள்ளார்.

இது குறித்து லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளதாவது” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பாக
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் சர்வதேச தலையீடு இன்றி உள்நாட்டிலேயே விசாரணை முன்னெடுக்கப்படும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சாபத்தின் பின்னரே ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் பதவி விலகினார். நாடும் வங்குரோத்து நிலையை அடைந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கு இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஏனெனில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் அடியாட்களின் ஆட்சியே தற்போது தொடர்கின்றது. அதனாலேயே கொழும்பு பேராயர் ஒருவிடயத்தை தெரிவித்திருக்கின்றார்.

அதாவது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதிகோரி ஜெனீவாவில் முறையிடவுள்ளதாக கூறியிருக்கின்றார். அவர் இவ்வாறு ஜெனீவா சென்றால் எமது நாட்டிற்கு பாரிய அவப்பெயரை ஏற்படுத்தும். ஏனென்றால் இலங்கை விவகாரங்கள் ஜெனீவாவில் ஏற்கனவே விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் ஜெனீவாவில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படுவது நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் எனவே உள்நாட்டிலேயே விசாரணை மேற்கொள்வது சிறந்ததாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் உள்நாட்டிலேயே விசாரணை மேற்கொள்ளப்படும் என எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பு பேராயரிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

Leave a Reply