• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பணயத்தொகை கேட்டு ருமேனிய மருத்துவமனைகளில் இணையவழி தாக்குதல்

ஐரோப்பிய கண்டத்தின் தென்கிழக்கில் உள்ள நாடு ருமேனியா (Romania). இதன் தலைநகரம் புசாரெஸ்ட் (Bucharest).

இங்குள்ள மருத்துவமனைகளில், நோயாளிகளின் விவரங்கள், மென்பொருள் கட்டமைப்பின் வழியே மருத்துவர்களுக்கு இடையே பரிமாறிக் கொள்ளப்படும்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று பிடஸ்டி குழந்தைகள் மருத்துவமனையில் (Pitesti Pediatric Hospital) துவங்கி அந்நாட்டின் பெரும்பாலான மருத்துவமனைகளின் இணையவழி கட்டமைப்பில் சைபர் தாக்குதல் நடந்துள்ளது.

தாக்குதல் நடத்தி பல நோயாளிகளின் தரவுகளை திறந்து பார்க்க முடியாதவாறு சைபர் குற்றவாளிகள் "லாக்" செய்து விட்டனர்.

தரவுகளை "அன்லாக்" செய்ய, தாக்குதலை நடத்தியவர்கள் 1,30,000 பவுண்டு பணயத்தொகையாக கேட்டனர். இந்த தொகை முழுவதும் பிட்காயின்களாக வழங்கப்பட வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

தற்போது வரை 25 மருத்துவமனைகள் இத்தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து தேசிய சைபர் பாதுகாப்பு ஆணையம் (National Cyber Security Directorate) தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

தாக்குதலை நடத்திய "வைரஸ்" மென்பொருளை கண்டுபிடித்த சைபர் துறையினர், இதை நிகழ்த்திய கும்பல் குறித்து தற்போது வரை கண்டறியவில்லை.

தாக்குதல் நடத்தியவர்கள் கேட்கும் தொகையை மருத்துவமனைகள் தாங்களாகவே தனிப்பட்ட முறையில் வழங்கி விட வேண்டாம் என்று பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

பாதுகாப்பை கருதி மருத்துவமனைகளுக்கான இணையவழி தொடர்பு தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது.

இணையவழி தொடர்பில் உள்ள "ஸ்கேனிங் மெஷின்" உள்ளிட்ட பல மருத்துவ உபகரணங்களின் பயன்பாடு இதனால் முற்றிலும் செயலிழந்து விட்டது.

இதையடுத்து, அனைத்துவிதமான மருத்துவ ஆலோசனைக்கான தகவல்களையும் மருத்துவர்கள் காகிதம் மற்றும் பேனா மட்டுமே உபயோகித்து பரிமாறி கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
 

Leave a Reply