• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கேலி, கிண்டல்களால் சினிமாவில் நடிப்பதையே நிறுத்தி விட்டேன்  - நடிகர் சுப்புணி 

சினிமா

கேலி, கிண்டல்களால் சினிமாவில் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் என நடிகர் சுப்புணி எனும் சுப்பிரமணி அளித்துள்ள லேட்டஸ்ட் பேட்டி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அருணாச்சலம் படத்தில் ரஜினிகாந்தை மிரட்டும் காட்சிகளில் இவர் நடித்திருந்த காமெடி காட்சிகள் அப்போது மட்டுமல்ல இப்போது கூட டிவியில் பார்த்தால் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து விடுவார்கள். நாடக கலைஞராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த இவர், சில படங்களில் நடித்துள்ளார்.

சுந்தர். சி இயக்கத்தில் ரஜினிகாந்த், செளந்தர்யா, ரம்பா, ரகுவரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அருணாச்சலம் திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய அடையாளமாக மாறியது. அந்த படத்தில் இவருடன் ரஜினிகாந்த் நடித்த காமெடி காட்சியில் அவர் டூப் போட்டது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

காமெடி நடிகர் சுப்புணி: 1976ம் ஆண்டு கே. பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான மன்மத லீலை படத்தில் மனசாட்சியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சுப்புணி. சிறு வயது முதலே நாடகத்தில் நடிக்க ஆர்வம் வந்த நிலையில், அங்கிருந்து அப்படியே சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார். தற்போது 72 வயதாகும் சுப்புணி அளித்த பேட்டியில் பல விஷயங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அருணாச்சலம்: 1997ம் ஆண்டு வெளியான அருணாச்சலம் படத்தில் மாப்பிள்ளை வீட்டுக்காரராக டிராக்டரில் இருந்து வந்து இறங்கும் இவர் வரிசையாக பல குழந்தைகளுடன் இவரும் ஒரு குழந்தை என நினைத்து ரஜினிகாந்த் தூக்கி கீழே இறக்குவதில் இருந்து அந்த திருமணம் முடியும் வரை இவருக்கும் ரஜினிக்கும் இடையே பல சூப்பரான காம்பினேஷன் காமெடி காட்சிகள் இடம் பெற்றிருக்கும். காபி துப்பும் காட்சியில் முதல் தடவையே முகத்தில் துப்பிட்டேன். உடனே என்ன சுப்புணி இப்படி துப்பிட்டீங்களே என ரஜினி வேடிக்கையாக கேட்டார். 2வது டேக் எடுத்து விடக் கூடாதுல சார் என்றேன். சூப்பர், நிறைய படங்கள் பண்ணனும் என்றார். ஆனால், அது முடியாமல் போய் விட்டது என்றார்.

அதிலும், தனது சட்டையில் இருந்து ரஜினிகாந்த் நிஜ தேள், நிஜ பல்லி மற்றும் நிஜ பாம்பை எடுத்து கீழே விடும் காட்சியில் நடித்திருப்பார். அதை பார்த்து சுப்புணி நிஜமாகவே கடைசியில் விடப்பட்ட பாம்பை பார்த்து பயந்தேன் என்றும் அந்த காட்சியில் ரஜினிகாந்துக்கு பதிலாக டூப் தான் அந்த நிஜ தேள், நிஜ பாம்பை எல்லாம் எடுத்துப் போட்டார் என்றும் அதற்கு முன்னதாக ரஜினிகாந்த் போலி பல்லி, போலி தேள், போலி பாம்பு எடுத்துப் போட்ட ஷாட்கள் படமாக்கப்பட்டு பின்னர் டூப் நடிகர் ரஜினிகாந்தின் சட்டையை அணிந்துக் கொண்டு அந்த காட்சியில் நடித்திருந்தார் என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார்.

அந்த படத்திற்கு பிறகு பல படங்களில் தனக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், எல்லாருமே என் உருவத்தையும் உயரத்தையும் வைத்து கிண்டல், கேலி செய்யும் காட்சிகளிலேயே நடிக்க அழைத்து மனதை நோகடிக்கச் செய்தனர். பிரபுதேவா மற்றும் பிரபு நடித்த சார்லி சாப்லின் படத்தில் நடிக்க சென்றேன். ஒரு பொருளை எடுக்க சொல்லி, எட்டவில்லை என சொல்ல வேண்டும் என வசனம் கொடுத்தார்கள். அத்துடன் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்றே சொல்லி விட்டு வந்து விட்டேன் என சினிமாவை விட்டு வெளியேறியது குறித்த உண்மையான காரணத்தையும் வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார். அதன் பின்னர் தொழில் செய்து தான் வாழ்க்கையை நடத்தினேன் என்றும் டிராமா மற்றும் சினிமாவில் வாங்கிய சம்பளம் எதுவுமே ஒட்டவில்லை என்றும் கூறியுள்ளார்.

நன்றி:மாரி.
 

Leave a Reply