• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எழுத்தாளர் சுஜாதாவை முதல் முதலாய் எப்போது பார்த்தீர்கள்?

சினிமா

கடந்த ஆண்டு குமுதம் சிநேகிதி பத்திரிகைக்காக திருமதி சுஜாதாவைப் பேட்டி கண்டேன்
அதிலிருந்து சில பகுதிகள்

எழுத்தாளர் சுஜாதாவை முதல் முதலாய் எப்போது பார்த்தீர்கள்?
என் அப்பா கடலூரில் சூப்பிரண்டென்ட் இஞ்சினீயராக இருந்தபோது என் கல்யாணப் பேச்சை எடுத்தார்கள். கல்லூரிப்படிப்பு முடித்தவுடன் கல்யாணம் செய்துவிடலாம் என்று அவர்களுக்கு எண்ணம். முதல் பெண்ணாயிற்றே!
அப்போதெல்லாம் மேட்ரிமோனி என்பதெல்லாம் அதிகம் கிடையாது. தெரிந்தவர்கள் மூலம்தான் பரிவர்த்தனை நடக்கும்.
அந்த சமயம் என் அப்பாவின் சீஃப் எஞ்சினீயரின் முதல் மகன் கல்யாணத்துக்கு இன்விடேஷன் வந்தது. கல்யாணம் திருவல்லிக்கேணியில் நடந்தது. அதற்கு அப்பா போயிருந்தார். கல்யாணம் முடிந்தது அந்த சீஃப் எஞ்சினீயர் என் அப்பாவிடம் “உனக்குக் கல்யாண வயசுல ஒருபொண்ணு இருக்கா இல்ல? கல்யாணம் ஆயாச்சா?” என்று கேட்டார்.
“இல்லை. பார்த்துண்டிருக்கேன்..” என்று என் அப்பா சொல்லியிருக்கிறார்.
“எனக்கு இரண்டாவது மகன் ஒருத்தன் இருக்கான். அவனுக்கு உன் பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுக்கறியா?” என்று கேட்டிருக்கிறார்.
அப்பாவுக்கு உடனே சரி சொல்வதில் பெரிய தயக்கம் இருந்தது. ஏனெனில் அந்த முதல் பிள்ளை கல்யாணத்தில் ஏகப்பட்ட சீர்கள் வைத்திருந்தார்களாம்.
“என்னால் இந்த அளவுக்கு சீரெல்லாம் செய்ய முடியாதே,..” என்று அப்பா தயங்கித் தயங்கிச் சொன்னாராம்.
“நான் உன்னை அதெல்லாம் கேட்டேனா? உன் பெண்ணைத்தானே கேட்டேன்?” என்று என் மாமனார் கேட்டிருக்கிறார்.
ஆமாம். அவர் என் மாமனாரானார்!
சும்மா பேருக்கு ஜாதகம் பார்த்தார்கள். கல்யாணம் நிச்சயமானபிறகுதான் பெண் பார்க்க வந்தார்!
நாங்கள் சென்னைக்கு வந்தோம் ‘பையன்’ அப்போது லீவு எடுத்தக்கொண்டு மெட்ராஸ் வந்திருந்தார்.
அவர்கள் வீட்டிலும் சரி.. எங்கள் வீட்டிலும் சரி.. அம்மா அப்பா தீர்மானிப்பதுதான் ஃபைனல் என்பதால் பெண் பார்க்கும் படலத்தால் எந்த மாறுதலும் நிகழ்ந்தவிடவில்லை.
மேலும் அப்போதெல்லாம் பையனைப் பிடிக்கிறதா இல்லையா என்றெல்லாம் சொல்லவே தெரியாத காலகட்டம். பெரியவர்கள் சொன்னால் சரி என்போம்.
திருமண வாழ்க்கை பற்றி..
1963 ல் திருப்பாதிரிப்புலியூரில் எங்கள் கல்யாணம் நடந்தது. சத்திரத்தில்தான் கல்யாணம். கல்யாண சத்திரத்துக்குக்கு நேர் எதிரில் கோவில் இருந்தது.
அவர் எழுத்தாளர் என்றெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. “மாப்பிளை நன்றாய்ப் படம் வரைவார்” என்று பேசிக்கொண்டார்கள்.
நண்பன் ஒருவரின் கதையைத் திருத்திக் கொடுக்கப்போய்க் குமுதத்தில் முதல் கதை பிரசுரமானது என்பது உங்களுக்கெல்லாம்தான் தெரியுமே.
நான் கல்யாணமாகி மாமனார் வீட்டுக்கு வந்த சில நாட்களில் அவருக்கு லீவு முடிந்துவிட்டதால் டெல்லிக்குக் கிளம்பிவிட்டார். மாமியார் வீட்டில் இரண்டு மாதங்கள் இருந்தேன். பிறகு டெல்லியில் வீடு பார்த்து என்னை அழைத்துக் கொண்டார். மாமனார்தான் டெல்லிக்குக் கொண்டு விட்டார்.
எனக்கு வட இந்தியா பரிச்சயம் இல்லை. ஹிந்தி அறவே தெரியாது. பள்ளிக்கூட வயசில் “மேஜ் பர் கலம்ஹை” என்று ஆரம்ப நிலை ஹிந்தி கற்றதோடு சரி.
பாஷை புரியவில்லை. ஊர் புதிது. திணறித்தான் போனேன். அழுகை வரவில்லை. ஆனால் திகைப்பாய் இருந்தது.
“கவலைப்படாதே.. பயப்படாதே” என்று பெரிய லெக்சர் எதுவும் கொடுத்து என்னை பயமுறுத்தாமல் இயல்பாய் விட்டதே நிம்மதியாக இருந்தது. இரண்டு நாட்களில் அவர் ஆபீஸ் போய்விட்டார்.
மண்ணெண்ணை வாங்க வேண்டியிருந்தது.

“எது வேணும்னாலும் எதிர்ல உள்ள பஞ்சாபி கடைக்குப் போய் வாங்கிக்கோ” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அது பெட்டிக்கடை. அவனிடம் போய்க் கேட்டால் கொடுப்பான் என்று இவர் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.
கெரசின் டின் எடுத்துப்போய்க் கடைக்காரரிடம் காண்பித்து அவரிடம் சைகையில் கேட்டேன். அவருக்குப் புரியவில்லை.
“கியா சாஹியே?” என்று அவர் கேட்டார். அது எனக்குப் புரியவில்லை.
இப்படியும் அப்படியும் பார்த்தேன். அங்கே ஒரு கெரசின் டப்பா இருந்தது. அதைக் காண்பித்துக் கேட்டேன். உடனே அளந்து கொடுத்தார். (அளவும்கூட அவர் தீர்மானித்ததுதான்). நான் பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்தேன். கடைக்காரர் பாக்கி சில்லறையைக் கொடுத்தார்.
இப்படியாக என் முதல் ஷாப்பிங் அனுபவம் இனிதே நிறைவடைந்தது (சிரிப்பு)
போகப்போக ஹிந்தி நன்றாய்ப் பழகிவிட்டது.
அவரோடு வெளியில் சென்ற அனுபவம்..
அவர் அடிக்கடி சினிமாவுக்குப் போவார். வேறு எங்கும் அதிகம் போக மாட்டார். ஏகப்பட்ட ஆங்கிலப்படங்கள் பார்ப்பார். பல முறை என்னையும் அழைத்துப் போயிருக்கிறார். தமிழ்ப்படங்கள் காலைக்காட்சியாக வரும். எனவே நாங்கள் போக மாட்டோம்.
டெல்லி வாழ்க்கை பற்றி…?
63 ல் கல்யாணம். 64ல் ஒரு முறையும் 65ல் ஒரு முறையும் 66ல் முறையும் பிரசவத்திற்காகப் பிறந்தகம் வந்தேன். (முதல் குழந்தை இப்போது இல்லை) ஒவ்வொரு பிரசவத்துக்கும் தனியாகத்தான் தமிழகம் வருவது வழக்கம். அவருக்கு அதிகம் லீவு போட முடியாது. இரண்டு நாள் பயணம் செய்து வர வேண்டும் என்பதால் வந்து கொண்டு விட்டுப்போவதற்கு ஒரு வாரம் ஆகிவிடுமே. அவர் வந்து டெல்லியில் ரயில் ஏற்றிவிடுவார். சென்னை சென்ட்ரலில் பெரியப்பா வந்து பிக் அப் செய்துகொண்டு போவார். பிறகு பெரியப்பா வீட்டிலிருந்து இரண்டு நாட்களில் அப்பா வந்து அழைத்துப்போவார். முதல் நாள் டெல்லியில் ஏறினால் மறு நாளைக்கு மறுநாள்தான் சென்னையில் வந்து இறங்குவேன். அப்போதெல்லாம் ரயில் டிக்கெட் ஐம்பது ரூபாய்க்கும் குறைவு.
முதல் குழந்தை இறந்தது பற்றி அவருக்கு வருத்தமும் சோகமும் இருந்திருக்கும். ஆனால் அதை என்னிடம் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் நான் டிப்ரெஸ் ஆகிவிட்டேன். ஒரு வருடத்துக்கு அப்படி இருந்தேன். அடுத்த குழந்தை பிறந்தவுடனே சரியாகிவிட்டது.
அந்த வருத்தமான சமயத்தில் வாய் வார்த்தையாய்ச் சமாதானம் சொன்னதைவிட என்னைக் கடைகளுக்கு அழைத்துச் சென்றார். சினிமாவுக்கு அழைத்துப் போனார்.
69ம் வருடம் பெங்களூருக்கு வந்துவிட்டோம்.
டெல்லியில் அவருடன் ஆல்ஃப்ரெட் ஹிட்ச் காக்கின் நார்த் பை நார்த்வெஸ்ட் போன்ற நிறையப் படங்கள் பார்த்திருக்கிறேன். எனக்கு அப்போதெல்லாம் சரளமாக இங்கிலீஷ் பேசத்தான் வராதே தவிர, வசனங்கள் நன்றாகப் புரிந்தன.
சினிமா பார்த்துவிட்டுப் பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு ஹோட்டலுக்குப்போய் சாப்பிட்டுவிட்டு வருவோம். வட இந்திய உணவு என்றெல்லாம் வித்தியாசமாகத் தோன்றவில்லை. எனக்கு அப்போதெல்லாம் எதுவுமே தெரியாது. அவர் எந்த ஹோட்டலுக்கு அழைத்துப் போகிறாரோ நான் பாட்டுக்குப் போய் அவரோடு சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவேன். அது பிடிக்காது இது பிடிக்காது என்று சொல்லத் தெரியாது.
நான் எதுவுமே வாங்கித்தரும்படி கேட்க மாட்டேன். தனிப்பட்ட முறையில் பாராட்டி எதுவும் சொல்ல மாட்டார்.
அவர் நன்றாய்க் கதை எழுதுவது என்னைப் பொருத்தவரையில் பாராட்டுக்குரிய விஷயம். அவர் எழுதிய கதைகளில் எனக்குப் பெண் இயந்திரம் என்ற கதை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.
ஆரம்ப காலத்தில் இரண்டு மூன்று கதைகள் திரும்பி வந்தது நினைவிருக்கிறது. அவர் உயரத்துக்கு வருவதற்குக் குமுதம் முக்கியக் காரணமாக அமைந்தது.
செலவு செய்வதில் அவர் மகாராஜாதான். சிக்கனம் பார்க்கத் தெரியாது. கையில் காசு இருந்தால் கடகடவென்று செலவு செய்வார். சில சமயங்களில் இருபதாம் தேதியே சம்பளம் மொத்தமும் தீர்ந்துபோன கதையெல்லாம் உண்டு.
அவர் பற்றி உங்களுக்கு சிலிர்ப்பும் பெருமிதமும் ஏற்படுமா?
ஊர் உலகம் அவரை அண்ணாந்து பார்த்து “எவ்வளவு பெரிய எழுத்தாளர் இவர்” என்று சொல்லும்போது எனக்குப் பெரிய வியப்பெல்லாம் ஏற்படாது. அவர் எனக்குக் கணவர்தானே?
அதே சமயம் யார் வரும்போதும் எனக்குத் தொந்தரவாகத் தோன்றியதே இல்லை.
குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்படி சொன்னால் ஒரு பத்து நிமிஷம் பார்த்துக்கொள்வார். அதற்கு மேல் அவருக்குப் பொறுமை இருக்காது. பால்கொடுக்கவெல்லாம் தெரியாது.
என் கஸின்ஸ் எல்லாம் அவருடைய கதைகளைப் படித்துவிட்டுப் பாராட்டுவார்கள்.
என் அம்மா வீட்டில் இதையெல்லாம் ஒரு பெரிய விஷயமாய்ப் பேசக்கூட மாட்டார்கள்.
வெளிநாட்டுப் பயணம் பற்றி..
நாங்கள் போன முதல் வெளிநாட்டுப் பயணம் அமெரிக்கா. அதை வைத்துத்தான் பிரிவோம் சந்திப்போம் கதையை எழுதினார்.
முதலில் நியூயார்க்கில் உள்ள தங்கைவீட்டுக்குப் போனோம். அந்த ஊரைச் சுற்றிக் காண்பித்தார்கள். தங்கையின் கணவர் அமெரிக்காவில் சர்ஜன். அவரிடம் உட்கார்ந்து மருத்துவம் சம்பந்தமான விஷயங்கள் நிறையப் பேசுவார்.
பெங்களூரில் இருக்கும்போது எங்களுக்கு டி எஸ் பி ஒருவர் நண்பரானார். அவரோடு ஒரு ரெய்டுக்குப் போய்ப் பார்த்துவிட்டு வந்தார்.
வாஷிங்டனில் டி கே பட்டம்மாளின் சகோதரர் டி கே ஜெயராமன் வீட்டுக்கு ஒரு விசிட் போனோம். இரண்டு நாட்கள் அங்கு தங்கினோம். பிட்ஸ்பர்க் கோவிலுக்கெல்லாம் அழைத்துப்போய்ச் சுற்றிக் காண்பித்தார்கள்.
‘See America‘ என்று ஒரு டிக்கெட் வாங்கிக் கொடுத்தார்கள். சிகாகோ, பாஸ்டன், லாஸ் ஏஞ்சிலஸ், கிராண்ட் கான்யன் என்று பல இடங்களுக்குப் போய்விட்டு வந்தோம்.
அதற்கப்புறம் என் தம்பிக்குக் குழந்தை பிறந்தபோதும், என் பேரன் பிறந்தபோதும் அமெரிக்கா போனோம்.
தம்பிவீட்டில் இரண்டு மாதங்கள் தங்கினோம்.
பிறகு குவைத்திலும் மஸ்கட்டிலும் மீட்டிங்குக்கு அழைத்தார்கள். போனோம்.
வெளிநாடுகளுக்குப் போனால் நான் பாஸ்போர்ட் போன்ற விஷயங்களை மிக ஜாக்கிரதையாக வைத்துக்கொள்வேன். அவருக்கு மறதி அதிகம். வேறு எதிலாவது கவனம் செலுத்திக்கொண்டே முக்கியமான விஷயங்களை விட்டுவிடக்கூடாதே என்று அவருடைய பாஸ்போர்ட்டையும் நான் பார்த்துப் பார்த்து எடுத்து வைத்து கவனமாகப் பாதுகாப்பேன். அவருடைய கவனமெல்லாம் கதை.. சினிமா.. நாவல்.. விஞ்ஞானம் என்றிருக்கும்.
அவருடன் எந்த நாட்டுக்குப்போனாலும் எந்த ஏர்போர்ட்டில் இறங்கினாலும் உடனே சிலர் அல்லது பலர் சூழ்ந்து கொண்டு பேசுவது எனக்கு சகஜமாகி விட்டது.
அவர் இறந்தபிறகு ஐந்தாறு முறை அமெரிக்கா போய்விட்டு வந்தேன். டூர் அழைத்துச் செல்லும் குழுவுடன் இப்போது பல்வேறு இடங்களுக்குப் போய் வருகிறேன். இந்தியாவில் உள்ள புனித தலங்களுக்கெல்லாம் போய் வருகிறேன்.
சீனா, பூட்டான், பாலி, ஹாங்காங், மலேஷியா, சிலோன் ஆகிய நாடுகளுக்குப் போய் வந்தேன்.
மிக சமீபத்தில் கத்தார் ஏர்லைன்ஸில் அமெரிக்கா போய்விட்டு வந்தேன். எனக்கு வயதாகிவிட்டது என்பதால் என் மகன் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் வாங்கிக்கொடுத்திருந்தான். விமானத்தில் ஒரு ஏர்ஹேஸ்டஸ் என்னை நெருங்கி வந்து “மேம் உங்களை எனக்கு யாருன்னு தெரியும். என் பெயர் மீரா. உங்களுக்கு எது வேணும்னாலும் கூப்பிடுங்க. உங்களுக்கு உதவி செய்யக் காத்திருக்கேன்” என்றாள். அவள் இவருக்கு ஃபேன் என்பது புரிந்தது. முழுத் தமிழில் பேசினாள்!
சில இடங்களில் அவரைப் பார்த்தவுடனேயே உதவிக்கு விரைந்து வருவார்கள். லக்கேஜ் எடுத்துத் தருவார்கள். ஏர்போர்ட்டில் சின்ன உதவிகளை வலிந்து வந்து செய்வார்கள். அவர் இல்லாதபோதும் என்னைப் பார்த்துவிட்டு அவர் மனைவி என்று தெரிந்து ஓடி வந்து உதவுகிறார்கள்.
ஜாதகத்தில் நம்பிக்கை உண்டா?
எனக்கு நம்பிக்கை உண்டு. அவருக்கு அதெல்லாம் கிடையாது. ஆரம்ப காலத்தில் டெல்லியில் இருந்தபோதும் சரி, பெங்களூரில் இருந்தபோதும் சரி, கோயிலுக்கெல்லாம் போனதே கிடையாது. நான் ரொம்பவும் வற்புறுத்தினால் டெல்லி மலைக்கோயிலுக்கு எனக்காக வருவார். லீவுக்கு ஸ்ரீரங்கத்துக்கு வரும்போது பெருமாளை சேவித்துவிட்டு வருவோம்.
நான் எங்காவது வெளியில் செல்லும்போது சாமிக்கு பூஜை செய்யும்படி சொல்லிவிட்டுப்போவேன். அவர் வேறு வேலைகள் கவனமாய் இருந்துவிடுவார்.
சின்ன வயது நினைவுகளை அவர் சொல்வதுண்டா?
மாட்டார். அவர் குடும்பத்தில் யாருமே எந்த விஷயத்தையுமே உட்கார்ந்து பகிர்ந்து பேச மாட்டார்கள். அது அவர்களின் இயல்பு. அண்ணன் தம்பிகள் ஒருவரோடு ஒருவர் தனியாகப் பேசிக் கொள்வார்களோ என்னவோ.
அவரை அதிகம் ஃப்ரெண்ட்ஸெல்லாம் தேடி வருவதில்லை. சினிமாக் கதைக்கு வருபவர்கள், எழுத்தாளர்கள் என்று பலர் வருவதுண்டு. அவர்களுடன் எனக்கு அதிக நட்புணர்வு ஏற்பட்டதில்லை.
எந்த உணவு அவருக்குப் பிடிக்கும்?
நான் என்ன சமைத்துப் போட்டாலும் சாப்பிடுவார். இதுதான் பிடிக்கும் என்றோ இது பிடிக்காது என்றோ எதுவும் கிடையாது. ஹோட்டல்களுக்குப் போனால் பெரும்பாலும் இட்டிலிதான் ஆர்டர் செய்து சாப்பிடுவார். நாங்களெல்லாம் வேறு எதாவது வாங்கிச் சாப்பிடுவோம்.
குழந்தைகள் பற்றி?
மகன்கள் படிப்பு பற்றி அதிகம் தலையிட்டதில்லை. சில சமயங்களில் நாளைக்குப் பரீட்சை என்றால் இன்றைக்கு ராத்திரி சொல்லிக்கொடுப்பார். குழந்தைகள் பிளஸ் டூ முடித்தவுடனேனே எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினீயரிங் எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். அவரே காலேஜில் சேர்த்துவிட்டார். அவர்களுக்கும் அதில்தான் ஆர்வம் இருந்தது. இவர் மாதிரி அபாரமாகப் படிக்கவில்லை என்றாலும் அவர்களும் புத்திசாலிகள்தான். நன்றாகவே படித்தார்கள்.
அவர்கள் கல்யாணம் பற்றி அவர் எதுவும் பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை. முதலில் சின்னப்பிள்ளைக்குத்தான் திருமணம் ஆயிற்று. மருமகள் ஜப்பானியப் பெண். அவன் அமெரிக்காவில் எம் எஸ் படிக்கும்போது உடல் நிலை சரி இல்லாமல் போனது. அப்போது அந்தப் பெண்தான் அவனை நன்றாய் அக்கறையுடன் கவனித்துக் கொண்டாள். எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் விரும்பினார்கள். அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். ஆனால் அது பற்றி அவர் எதுவுமே சொல்லவில்லை. முதலில் எனக்கு “அடடா ஜப்பானியப்பெண்ணைப் பண்ணிக்கொள்கிறேன் என்கிறானே..’ என்றுதான் இருந்தது. ஆனால் நம் பிள்ளைக்கு உடம்பு சரியில்லாத நிலையில் நம்மால் போய்க் கவனித்துக்கொள்ள முடியாதபோது அவள் கவனித்துக்கொண்டாள் என்பது எத்தனை பெரிய விஷயம் என்று யோசித்தேன். எனவே சம்மதித்தேன். இப்போது அவள் மிக அற்புதமானவள் என்று நிரூபித்துக்கொண்டே இருக்கிறாள். அவர்கள் வீட்டுக்குப் போனால் நூறு சதவீத தென்னிந்திய சமையல் செய்து அசத்துகிறாள். மிக அருமையான பெண். அன்பானவள்.
அவர் எழுத்தாளர் என்பது பற்றிப் பெருமிதப்படுவாரா?
அவர் என்னிடம் ஒருபோதும் பெருமையடித்துக்கொண்டதில்லை. இயல்பாகத்தான “கதை வந்திருக்கு“ என்று போகிற போக்கில் சொன்னார்.
உண்மையில் நான் கல்யாணமாகி வந்தபுதிதில் அவர் கதை எழுதியோ படித்தோ அதிகம் பார்த்ததில்லை. எப்போதும் கித்தார் வாசிப்பார். அதையும் சுயம்புவாகக் கற்றுக்கொண்டார். இனிமையாக வாசிப்பார். அதைவிடவும் ஏகப்பட்ட பெயின்டிங்ஸ் வரைந்து தள்ளுவார். ஞாயிற்றுக் கிழமையானால் ஆயில் பெயிட்டிங் வரைவதற்கு உற்சாகமாக உட்கார்ந்துவிடுவார்.
வீடு முழுக்கப் புத்தகமாக இருக்கும். படுக்கையில் ஆறேழு இருக்கும். ஒவ்வொன்றிலும் புக்மார்க் இருக்கும். ஏதேனும் ஒன்றை எடுத்த, விட்ட இடத்திலிருந்து தொடர்வார். வெவ்வேறு ஜானர்களைப் படிப்பார். விமானப் பயணங்களின்போதும் புத்தகங்கள் நிறையப் படிப்பார். அல்லது விமானத்தில் உள்ள சின்னத் திரையில் சினிமா பார்ப்பார்.
இப்போது எப்படி இருக்கிறீர்கள்?
தற்போது மைலாப்பூரில் இருக்கிறேன். ஆறு மாதங்களாக அமெரிக்காவில் இருந்துவிட்டு சமீபத்தில்தான் வந்தேன். எண்பது வயசானாலும் மனதளவில் திடமாக இருக்கிறேன். ஆனால் உடலில் தள்ளாமை வராமல் இருக்குமா!
நானே சமையல் செய்துகொள்கிறேன். வீட்டு வேலைகள் செய்வதற்கு உதவிக்கு ஒரு பெண் இருக்கிறாள். முன்பெல்லாம் துடைத்து சுத்தம் செய்து வீட்டின் எல்லா பாகங்களையும் பளிச்சென்று வைத்துக்கொள்வேன். இப்போது அதையெல்லாம் விட்டுவிட்டேன்.
சமீபத்தில் என் சகோதரி வந்து இரண்டு மாசம் இங்கு தங்கிவிட்டுப்போனாள்.
போன வருடம் விமானங்களில் இந்தியர்கள் செய்ய அனுமதி கிடைக்காததால் அமெரிக்கா செல்ல முடியவில்லை. பிறகு மருமகள் அமெரிக்காவுக்கு டிக்கெட் வாங்கி அனுப்பினாள். இரண்டு மகன்கள் வீட்டிலும் மூன்று மூன்று மாதங்கள் இருந்துவிட்டு வந்தேன். இர்ண்டு வருடங்களாகப் போய்விட்டு வர முடியவில்லை.இனி அவர்களும் அடிக்கடி வருவார்கள். நானும் போய்விடு வருவேன்.
 

 

Leave a Reply