• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எனக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்து இப்போது வரை..

எனக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்து இப்போது வரைக்குத் நான் ஆகர்ஷிக்கும், அன்பு பாராட்டும் ஒரே நடிகர்னா அது ரஜினிகாந்த் மட்டும் தான். ஆனாலும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே நேரில் பார்த்த மற்றொரு நடிகர் இன்று வரை என்னை அவர் மீதான அபிமானத்தோடு இருக்கச் செய்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்னால் அவரைப் பார்த்த அந்த நிகழ்வு இன்னமும் என் கண்களில் அப்படியே நிலை கொண்டிருக்கிறது. 

அப்போது எனக்கு 23 வயது, திருப்பூரில் ஒரு கம்பெனியில் fabric managerஆக பதவியில் இருந்தேன். நூல் டெலிவரி எடுப்பது முதல் துணியாவது வரை மட்டுமல்லாது கல்கத்தாவிற்கு அந்த துணிகளை அனுப்பி வைப்பது வரை என்னுடைய பொறுப்பாகும். ஒவ்வொரு முறையும் அனுப்பும் துணியின் எடை ஏறக்குறைய 5000 கிலோவுக்கு மேலிருக்கும். அந்தத் துணிகளை திருப்பூரில் இரயிலில் ஏற்றிக் கொண்டு சென்னைக்குச் சென்று அங்கிருந்து கல்கத்தா செல்லும் ஹௌரா எக்ஸ்பிரஸில் மாற்றி ஏற்றிவிட வேண்டும். என்னுடைய பண்டல் வந்ததும் திருப்பூரில் பழக்கமான லோடுமேன்கள் ஏற்றிவிட இரயில் சென்னை சென்றதும் அங்கிருக்கும் இராமு என்ற போர்ட்டர் தலைவர் வந்து பண்டலை இறக்கி ஹௌரா எக்ஸ்பிரசில் ஏற்றி விடுவார். இந்த போக்குவரத்து மாதம் ஒரு முறை நடைபெறும். 

திருப்பூரில் இரவு ஒன்பதரை மணிக்கு வரும் நீலகிரி எக்ஸ்பிரஸில் ஏறினால் விடியற்காலை ஆறரை மணிக்கு சென்னைக்கு சென்று சேரும். நீலகிரி எக்ஸ்பிரஸ் மேட்டுப்பாளையத்தில் கிளம்பி சென்னை வரை செல்லும். அதனால், ஊட்டியில் படப்பிடிப்பு நடந்தால் பெரும்பாலான நடிகர் நடிகைகள் அந்த இரயில் வண்டியில்தான் வருவார்கள். வண்டி திருப்பூர் நிலையத்தில் நிற்கும் தருணத்தில், ஜன்னல் வழியே பார்க்கும்போது ஒவ்வொருமுறையும் பல நடிகர்களைப் பார்க்க முடியும். அதேபோல சென்னையில் இரயில் நின்ற பிறகு நடிகர்கள் நடந்து போவதைப் பார்க்கலாம. இதில் இராமு போர்ட்டர்தான் எக்ஸ்பர்ட் நிறையமுறை நான் கவனிக்காத போது அவர்தான், பாருங்க சார் அந்த நடிகர் போகிறார் என்பதை அழைத்து காண்பிப்பார். 

அந்த நாளிலும் அப்படித்தான், நான் ஏதோ யோசனையுடன் நின்று கொண்டிருந்தபோது, இராமு சார் அங்க பாருங்க என்றார். நான் திரும்பிப் பார்த்த சமயம் எனக்கும் அவருக்குமிடையே 30 அடி தொலைவிருக்கும். காவி வேட்டி வெள்ளை சட்டையில் ஆஜானுபாகுவான ஒரு உருவம். நிமிர்ந்த கம்பீரமான நடை. முதலாவது பிளாட்பாரத்தில் இரயிலின் முகப்பிலிருந்து நூறடி தூரத்தில் இரயில் நிலையத்தின் வாசல் முகப்பு இருக்கும். அவ்வளவு தூரத்தையும் சில எட்டுகளில் கடந்துவிட்டார். வேகமாக சென்றார் என்பதற்காக அது ஓட்டமல்ல, வாகா எல்லையில் நமது இராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடத்தி இரு நாட்டு எல்லைக் கதவை மாலையில் மூடுவார்கள், அதற்கென்ற ஒரு பிரத்யேகமான நடை நடப்பார்கள். அந்த நடையை அவர் சர்வசாதாரணமாக நடந்து சென்றார். 

வேட்டி என்பதற்காக அது தடுக்கி விடுமென்று, ஒரு முனையை தூக்கிப் பிடித்தபடிதான் நாம் நடப்போம். ஆனால் அந்த நடிகர் வேட்டியை அப்படி தூக்கிப் பிடிக்காமலே, அந்த வேட்டி கூட கட்டுப்பாடான தொழிலாளி போல அவரது நடைக்கு ஈடுகொடுத்து வந்தது. என் இத்தனை வருட அனுபவத்தில் அப்படியான கம்பீர நடையை மீண்டும் ஒருவரிடம் இதுவரை பார்த்தேயில்லை. அந்த நடிகர் வேறு யாருமல்ல நமது கேப்டன் விஜயகாந்த் தான். அதன் பிறகும் பல நடிகர்களைப் பார்த்திருக்கிறேன், அந்த நடைக்கு ஈடான அதிரடி நடையைப் பார்த்தேயில்லை. தலைவர் ரஜினி வேகமாக நடப்பார், ஆனால் கேப்டனின் அந்த கம்பீர நடைக்கு ஈடாகாது. மீண்டு வாருங்கள் கேப்டன் அந்த நடையைப் பார்க்க வேண்டும். 

அரு. சந்திரசேகர்

Leave a Reply