• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள்.

சினிமா

நவராத்திரியில் நடிக்கிற போது அது அண்ணனின் 100வது படம் என்று எனக்குத் தெரியாது. சிவாஜியோடு யார் நடித்தாலும் அவரது நடிப்புக்கேற்ற ரீ ஆக்ஷன் பண்ணியாக வேண்டும். அவர் கூட நடிப்பது ரொம்பவும் எளிதானது.

நாம் டல்லடித்து விடக்கூடாது என்ற வீம்பும் பிடிவாதமும் கூட நடிப்பவர்களுக்குத் தானாகவே வந்துவிடும். சத்யவான் சாவித்ரி தெருக்கூத்தை முழுக்க முழுக்க அவரிடமே பாடம் பண்ணிக்கொண்டு நடித்தேன். காரணம் தெருக்கூத்தை நான் பார்த்தது கிடையாது.

பைத்தியக்கார ஆஸ்பத்திரி  சம்பவங்களில் டாக்டராக வரும் சிவாஜியை, அவர் முன்னிலையிலேயே சில காட்சிகளில் குறும்பாக இமிடேட் செய்து நடித்தேன். நான் அவ்வாறு நடிப்பதை அவர் ஆர்வமாக ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

எத்தனைப் பெரிய நடிகர் சிவாஜி! நான் அவரை கேலி செய்வதாக நினைக்காமல், பெருந்தன்மையுடன் என்னைப் பாராட்டினார். ரசிகர்களும்  அதற்குக் கலகலப்பாகக் கைத்தட்டினார்கள். மற்ற பிரபல ஹீரோக்களிடம் அது சாத்தியமா என்ன...?’ - சாவித்ரி

ஏ.பி.என்.இயக்கத்தில் சிவாஜி- சாவித்ரி தொடர்ந்து சங்கமித்தனர். நவராத்திரியை அடுத்து  வரலாறு காணாத ஆன்மிக பிரம்மாண்டமாக திருவிளையாடல் உருவானது. சாவித்ரி அதில் ஈஸ்வரி. சக்தி ஸ்வரூபமாக, பெண் உரிமைக்காக சிவனிடம் போராடும் வேடம். ‘சிவா’ ஜியுடன் ஒப்பிடும் போது சாவித்ரிக்கு நடிப்பாற்றலைக் காட்டும்  வாய்ப்பு குறைவு.

ஏலே எலோ... நீலச் சேலை கட்டிக் கொண்ட சமுத்திரப் பொண்ணு’ பாடற் காட்சி அடங்கிய கடற்கரை சம்பவங்கள்  ரசிகர்களுக்கு நிறைவளித்தது

1965ன்  ஆடி அமாவாசை முதல்,  ஐம்பது ஆண்டுகளாக  திருவிளையாடலில் சாவித்ரியின் சந்தனக்  குரல், நம் செவிகளில் திரும்பத் திரும்ப பக்திமணம் கமழச் செய்கிறது.

‘திருவிளையாடலில் எனக்குப் பார்வதி வேஷம். அதுவும் பச்சை நிற மேக் அப். அதைப் போட்டுக் கொள்ளும் போது எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. ஆனால், அப்புறம் படத்தில் அதுவே பிரமாதமாகப் பொருந்தி விட்டது.

பரமசிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் அப்படியோர்  அமைப்பை நீங்கள் எங்கே பார்ப்பது? நாங்கள் காலண்டரைப் பார்த்து அமைத்துக் கொண்டோம்!’ -  சாவித்ரி.

சென்னையில் முதன் முதலாக சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி என்று மூன்று தியேட்டர்களில் மகத்தான வசூலுடன் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் திருவிளையாடல். தேசிய அளவில் பாராட்டுப் பத்திரமும் அதற்குக் கிடைத்தது.            

கற்பூர ஆரத்தி!

திருவிளையாடலைத் தொடர்ந்து உடனடியாக ஏ.பி. என். கூட்டணியில் சரஸ்வதி சபதம் தொடங்கியது. சாவித்ரி- சரஸ்வதி. பத்மினி- பார்வதி. தேவிகா- மகாலட்சுமி.சிவாஜி கணேசன் நாரதராகவும், சரஸ்வதியால்  ஊமையாக இருந்து ஞானம் பெற்றப் புலவராகவும் இரு வேடங்களில் நடித்து முப்பெரும் தேவியருக்கும் வேலை இல்லாமல் செய்து விட்டார்.

தினமும் முதல் காட்சி படமாகும் வேளையில் தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி, கலைஞர்கள் பய பக்தியோடு சாமி கும்பிடுவது சினிமா சடங்கு. ஏ.பி. என். என்ன செய்தார் தெரியுமா...?

சாவித்ரி முழுதாக அரிதாரம் பூசி சர்வ அலங்காரத்துடன், சரஸ்வதி தேவியாக சத்திய லோகம் செட்டுக்குள் நுழைவார். நடிகையர் திலகத்தை அரங்க வாசலில்  நிறுத்தி, அவருக்கு உச்சி முதல் பாதம் வரை திருஷ்டி கழித்து கற்பூர ஆரத்தி காட்டினார்.

நன்றி!
யாழ் இணையம் சாவித்திரி தொடர் பகுதியிலிருந்து....

Leave a Reply