• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவாஜி இப்போது இருந்தால், அவரைவைத்துப் படம் இயக்கும் ஆசை உண்டா?

சினிமா

'சிவாஜி இப்போது இருந்தால், அவரைவைத்துப் படம் இயக்கும் ஆசை உண்டா?
''இருந்தபோதே... ஆசைப்பட்டேன்!
'நந்தா’ படத்தில் பெரியவர் கேரக்டரில் நடிகர் திலகத்தை நடிக்கவைக்க வேண்டும் என எனக்குப் பேராசை. கதை சொல்ல வரும்படி அன்னை இல்லத்தில் இருந்து அழைப்பு.
உள்ளே நுழைந்தால் பகீர் என்று இருந்தது. ஹால் சோபாவில் சிவாஜி சார் மட்டும். ஆஹா, சிங்கத்திடம் தனியே சிக்கிக்கொண்டேன். 'சலங்கை ஒலி’ கமல் மாதிரி என் கால்கள் இரண்டும் பதற்றத்தில் பரத நாட்டியம் ஆடத் தொடங்கி இருந்தன.
'வாப்பு, ஒக்காரு!’
'இல்லீங்...’
'ஒக்கார்றதுக்குத்தேன் சோபா வாங்கிப் போட்ருக்கேன். சும்மா ஒக்காருங்க. சோபாவுக்கும் கொஞ்சம் பெருமையா இருக்கும்ல.’
அமர்ந்தேன்.
'என்ன சாப்பிடுறீக... காப்பியா... டீயா? நம்ம வீட்ல ரெண்டும் இருக்கு.’
'இல்ல, இப்பத்தான் சாப்பிட்டு வந்தேன் சார்.’
'ஒண்ணுமே சாப்பிட மாட்டேன்னு சொல்றதுக்கா, இம்புட்டுத் தூரம் வந்திருக்கீங்க. என்ன சாப்பிடுறீகன்னு கேட்டேனப்பு...’
'டீ சார்.’
டீ வந்தது. டம்ளர் டான்ஸ் ஆட ஆரம் பித்தது.
'அப்பு, ஒனக்குச் சொந்த ஊரு எது?’
'நாராயணத் தேவன்பட்டிங்க.’
'ஓஹோஹோஹோ...’ கண்கள் கபடி ஆட, உதடு குவித்துச் சிரித்தபடி தாடியை வருடினார் சிவாஜி.
'என்ன படம் பண்ணி இருக்க?’
' 'சேது’ன்னு ஒரு படம்.’
'ஆங்... ச்சொன்னாய்ங்க... ச்சொன்னாய்ங்க...’ என்றார் ராகம் போட்டு.
என்ன செய்வது எனப் புரியாமல் மிரள மிரள உட்கார்ந்து இருந்தேன்.
'சொல்லுங்க டைரக்டர் சார்... உங்களுக்கு நான் என்ன செய்யணும்?’
'ஒரு படம் பண்றேன்ங்க. அதுல நீங்க நடிக்கணும்.’
'என்னவா நடிக்கணும்?’

'அது வந்து... ஒரு பெரியவர் கேரக்டர்ங்க. சேதுபதின்னு ராஜ வம்சம்ங்க. அவர்கிட்ட அநாதையா ஒரு பையன் வந்து சேர்றான். ரெண்டு பேருக்குமான அன்புங்க. அப்புறம் ஊர்ல நிறையத் தப்பு நடக்குதுங்க. இந்தப் பொடியன் போய்த் துவம்சம் பண்றானுங்க. பழி வாங்க வர்ற வில்லனுங்க உங்களைப் போட்றா னுங்க... அப்பிடி ஒரு லைன்யா’- உளறிக்கொட்டுகிறேன் என எனக்கே தெரிந்தது.
'ம்... போட்றாய்ங்களா? அவ்ளோ ஈசியா என்னைக் கொன்ற முடியுமா? அவிய்ங்க என்னை நாலஞ்சு வெட்டு வெட்டுனா, நான் ஒரே வெட்டாச்சும் வெட்ட மாட்டேனா... ம்ம்ம்ம்...’ - மீசையை முறுக்கி சிவாஜி எழ, வசமாச் சிக்கிட்டேன் என்பது மட்டும் புரிந்தது.
'இல்ல, பில்ட்-அப்லாம் இருக்கு சார், அது பண்ணிரலாம்.’
'என்னாது... பில்ட்-அப்பா? ஓஹோஹோஹோ, போய் நல்லா பில்ட்-அப் பண்ணுங்க, ம்ம்ம்... நான் சொல்றேன் சரியாப்பு!’ எனக் கை கூப்பினார். அப்படியே 'வசந்த மாளிகை’ சிவாஜி சிரிப்பு.
வணக்கம் சொல்லி வெளியே வந்த எனக்குப் பதற்றம் குறையவில்லை. தெரு முக்குப் பெட்டிக் கடையில் ஒரு தம் வாங்கிப் பற்றவைத்தேன். இரண்டாவது பஃப் இழுக்கையிலேயே, 'ஐயோ... அன்னை இல்லத்தில் இருந்து ஏதாச்சும் ஜன்னல் வழியே சிவாஜி சார் என்னைக் கவனித்துக்கொண்டு இருந்தால் என்னாவது?’ எனத் தோண, அப்படியே சிகரெட்டைப் போட்டுவிட்டு, எடுத்தேன் ஒரு ஓட்டம்!''
( விகடன் மேடையில் , இயக்குனர் பாலா)
 

Leave a Reply