• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அனைத்து மாவீரர்களது பெயர்களும் பொறிக்கப்பட்டு நினைவேந்தலிற்கு ஏற்பாடு

இலங்கை

அனைத்து மாவீரர்களது பெயர்களும் பொறிக்கப்பட்டு நினைவேந்தலிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

இன்றையதினம் குறித்த குழுவினர் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கனகபுரம் மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் உப தலைவர் அருணாசலம் வேழமாலிகிதன் கருத்துத் தெரிவிக்கையில்,

“கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தினுடைய மாவீரர் நாள் நிகழ்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை 27ஆம் நாள் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இம்முறை துயிலுமில்ல வளாகம் 2007ஆம் ஆண்டு வரை மாவீரர்களாக இருந்த மாவீரர்களின் பெயர் பட்டியல் பெறப்பட்டு ‘அ’ தொடக்கம் ‘ஈ’ வரையான வலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இருந்த கல்லறைகள் மற்றும் நினைவுக் கற்கள் என்பவற்றினுடைய பெயர் விபரங்கள் குறித்த வலையங்களில் பெயரிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

2007, 2008, 2009ம் ஆண்டு வரையும் மாவீரர்களானவர்களது பெயர் விபரங்கள் இதுவரையும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. அத்தகைய விபரங்கள் தலைமைச் செயலகத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அவையும் எதிர்வரும் காலங்களில் ஒழுங்குபடுத்தப்படும்.

இந்த வருடம் அப்படியாக மாவீரர்களிற்காக ‘உ’ வலையம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வலையத்தில் பெயர் குறிப்பிடப்படாத மாவீரர்களிற்கான சுடர்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

அது தவிர, கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் தவிர்ந்த ஏனைய துயிலுமில்லங்களிற்கு செல்ல முடியாதவர்கள் விளக்கேற்றுவதற்காக ‘ஊ’ வலையம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இந்த வலையங்களின் அடிப்படையில், பெற்றோர்கள், உரித்துடையவர்கள் நேர காலத்தோடு வருகை தந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒழுங்கமைப்புக்கு அமைவாக அஞ்சலி செலுத்த முடியும்.

துயிலுமில்ல வளாகத்தின் புனிதத்துவத்தை பேணும் வகையில் அனைவரும் கலாசார உடைகளை அணிந்து அந்த புனிதத்தை பாதுகாக்க ஒத்துழைக்க முன்வர வேண்டும்.

அஞ்சலி செலுத்தப்படும் நேரத்தில் செல்பி எடுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை தவிர்த்து அஞ்சலிக்கு ஒத்துழைக்கும் வகையில் அனைவரும் முன்வர வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply