• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குழந்தைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் குழுவினர்- நோர்வே பெண் குற்றச்சாட்டு

இலங்கை

சிசுக்கள் மற்றும் சிறு குழந்தைகளை வெளிநாட்டவர்களுக்கு தத்தெடுப்பதற்காக விற்பனை செய்யும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று (23) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக மற்றும் ஆட்கடத்தல் விசாரணைப் பிரிவினர் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் அறிக்கை சமர்ப்பித்ததுடன், கண்டி பிரதேசத்தில் நீண்டகாலமாக செயற்படும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினால் இந்தக் கடத்தல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.

அந்த ஆட்கடத்தலுக்கு ஆளாகி தற்போது நோர்வேயில் வசிக்கும் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இது தொடர்பான சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

சுமார் 1 மாத குழந்தையாக இருந்தபோது, அதாவது 1992 ஆம் ஆண்டு நோர்வே நாட்டு தம்பதியருக்கு தாம் கொடுக்கப்பட்டதாகவும், அண்மையில் தான் தனது பெற்றோரைத் தேட ஆரம்பித்ததாகவும் குறித்த பெண்ணின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, தனது பெற்றோர் இலங்கையர்கள் எனத் தெரியவந்ததையடுத்து அவர்களைத் தேடி இலங்கை வந்ததாகவும், இதனால் தனது தாயைக் கண்டுபிடித்ததாகவும் நோர்வேயில் வசிக்கும் பெண் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக கண்டியில் உள்ள ஒருவருக்கு தாம் கொடுக்கப்பட்டதாகவும், தனது சகோதரருக்கும் அவ்வாறே கொடுக்கப்பட்டுள்ளதாகவும், கண்டியில் உள்ள குறிப்பிட்ட கும்பல் ஒன்று போலியான ஆவணங்களை தயாரித்து குழந்தைகளை அழைத்து சென்று வெளிநாட்டு நபர்களுக்கு விற்பனை செய்வதாக தனது தாய் தெரிவித்ததாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு பிரதான நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
 

Leave a Reply