• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கல்முனை மாநகர சபையின் அசமந்த போக்கினால் மக்கள் அவதி

இலங்கை

கல்முனை மாநகர சபையின் பொறியியல் பிரிவின் அசமந்த போக்கினால் தாம் பெரும் அசௌகரியத்தை சந்தித்து வருவதாக பொலிவேரியன் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாவது” எமது பகுதியில் உள்ள வீதிகள் பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளன. தரமற்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலமே பாதைகள் இவ்வாறு உடைந்து காணப்படுகின்றன.

இது குறித்து பலதடவைகள் அதிகாரிகள், அரசியல் வாதிகளுக்கு எடுத்துரைத்த போதும்  எவ்வித பயனும் கிட்டவில்லை. மழைகாலங்களில் பாம்பு போன்ற நச்சு விலங்குகள் வீடுகளை நோக்கி படையெடுக்கும் நிலையும் காணப்படுகின்றது.

வீதிகளில் குளம் போன்று நீர் தேங்கி நிற்பனதால் பாதசாரிகளும், பாடசாலை மாணவர்களும் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது அடிக்கல் நடப்பட்டு பல வருடங்கள் மற்றும் பல மாதங்கள் கடந்தும் வீதி அபிவிருத்திக்கு நடப்பட்ட எந்த அடிகற்களும் இன்னும் செயலுருவம் பெறவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

வடிகான்கள் நீர் வடிந்தோடமுடியாதளவு மண்னால் அடைபட்டு இருப்பதுடன் டெங்கு உட்பட பல்வேறு நோய்களை உண்டாக்கும் தன்மைகொண்ட கொள்கலன்கள் வடிகான்களில் வீசப்பட்டும் காணப்படுகின்றது. வடிகான்களுக்கு பொருத்தமான மூடிகள் இடப்படாமையினால் சிறுவர்கள் அடிக்கடி விபத்துக்களை சந்திப்பதுடன் பெரியோர்களும் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர். இது தொடர்பில் கல்முனை மாநகர பொறியியல் பிரிவும், பிரதேசத்திற்கு பொறுப்பான அதிகாரிகளும் அசமந்தபோக்குடன் செயற்பட்டு வருகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வை வழங்க முன்வரவேண்டும்” இவ்வாறு மக்கள் கேட்டுக்கொண்டனர்.
 

Leave a Reply