• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போருக்கு மத்தியில் இஸ்ரேல் செல்லும் ஆயிரக்கணக்கான இலங்கைத் தொழிலாளர்கள்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில் ஆயிரக்கணக்கான இலங்கைத் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதார நெருக்கடி பயமுறுத்துவதாக கூறும் பல்பொருள் அங்காடி மேலாளரான லக்நாத் டயஸ், பண்ணை வேலைக்கு என டிசம்பரில் இஸ்ரேலுக்கு புறப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
  
சுமார் 10 மடங்கு அதிகமாக சம்பளம் கிடைப்பதால், போருக்கு மத்தியில் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். டயஸ் போன்று 20,000 இலங்கைத் தொழிலாளர்கள் டிசம்பர் தொடக்கத்தில் இஸ்ரேலுக்கு புறப்பட தயாராக இருப்பதாகவும், பண்ணை மற்றும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட இருப்பதாகவும் இலங்கை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் பண்ணைகள், பெரும்பாலானவை நாட்டின் மத்திய பகுதியிலும் தெற்கிலும் அமைந்துள்ளன. நிலத்தை உழவும் அறுவடை செய்யவும் பாரம்பரியமாக ஆயிரக்கணக்கான தாய்லாந்து மற்றும் பாலஸ்தீனிய தொழிலாளர்களையே நம்பியுள்ளனர்.

ஆனால் ஹமாஸ் தாக்குதலை அடுத்து, பெரும்பாலான தாய்லாந்து தொழிலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். அத்துடன் பாலஸ்தீன மக்களுக்கு பணியிடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

39 வயதான டயஸ் தெரிவிக்கையில், இலங்கையில் போர் காலத்தில் வாழ்ந்துள்ளதால், தற்போதைய இஸ்ரேல் - ஹமாஸ் நெருக்கடியை எதிர்கொள்ளும் அனுபவம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தமது சம்பளம் 219 டொலர் என குறிப்பிட்டுள்ள டயஸ், அது 5 பேர்கள் கொண்ட தமது குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் உள்ள பண்ணையில் பணியாற்றுவதன் ஊடாக இலங்கை பண மதிப்பில் 700,000 சம்பாதிக்க முடியும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

குறைந்தது 5 ஆண்டுகள் வரையில் இஸ்ரேலில் பணியாற்றவும் அவர் முடிவு செய்துள்ளார். இஸ்ரேலிய பண்ணைகளில் வேலை செய்வதற்கு 10,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக இலங்கையின் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கட்டுமானத் துறைக்கு மேலும் 10,000 தொழிலாளர்களை அனுப்ப இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இஸ்ரேலில் விவசாயம் மற்றும் முதியோர்களை கவனிக்கும் பணிகளில் ஈடுபட்டுவரும் சுமார் 9,000 இலங்கையர்களுடன் இவர்களும் இணைந்துகொள்வார்கள் என்றே கூறப்படுகிறது.

பொருளாதார நெருக்கடி காரணமாக 2022ல் மட்டும் இலங்கையில் இருந்து 312,000 மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர். 2023ல் இதுவரை வெளியேறியவர்கள் எண்ணிக்கை 268,000 என்றே அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a Reply