• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடக்கு பகுதியை தொடர்ந்து தெற்கு காசாவில் தாக்குதல் - பீதியில் பொதுமக்கள்

பாலஸ்தீனத்தின் காசா முனையில் இஸ்ரேல் போர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை குறி வைத்து தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் தெரிவித்தாலும், குழந்தைகள், பெண்கள் உள்பட 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியபடி முன்னேறியது. அவர்களுடன் ஹமாஸ் அமைப்பினர் சண்டையிட்டனர். ஆனாலும் வடக்கு காசா மற்றும் காசா சிட்டி பகுதியை தனது கட்டுப்பாட்டில் இஸ்ரேல் ராணுவம் கொண்டு வந்துள்ளது.

இந்தநிலையில் வடக்கு காசாவை தொடர்ந்து தெற்கு காசா பகுதிக்குள் நுழைய இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளது. வடக்கு காசாவில் இருந்து சுமார் 11 லட்சம் பேரை தெற்கு பகுதிக்கு செல்லுமாறு இஸ்ரேல் வலியுறுத்தியது. இதையடுத்து பொதுமக்கள் தெற்கு பகுதிக்கு சென்றனர்.

ஏற்கனவே தெற்கு காசாவில் யூனுஸ்கான், ரபா ஆகிய இடங்களில் வான் வழித்தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அங்கும் இஸ்ரேலின், தரைப்படை தனது நடவடிக்கையை விரிவுப்படுத்த முடிவு செய்துள்ளது.

தெற்கு பகுதியில் லட்சக்கணக்கானோர் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

இஸ்ரேல் ராணுவம் நுழைந்தால் அவர்களுடன் ஹமாஸ் அமைப்பினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபடுவார்கள்.

இதனால் தெற்கு காசாவில் மேலும் பாதிப்பு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. காசாவின் மிகப்பெரிய ஆஸ்பத்திரியான அல்-ஷிபாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் புகுந்து சோதனை நடத்தியது.

ஆஸ்பத்திரியை சுற்றி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆஸ்பத்திரியில் எரிபொருள் தீர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. ஏற்கனவே குறை பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் இறந்த நிலையில் மேலும் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது.

30-க்கும் மேற்பட்ட நோயாளிகளும் இறந்துள்ளனர். அல்-ஷிபா ஆஸ்பத்திரியில் மோசமான சூழ்நிலை நிலவுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

காசாவுக்குள் அத்தியாவசிய பொருட்களை அனுப்ப இஸ்ரேல் மறுத்தது. இதனால் மருத்துவ சேவைகள் முடங்கின. இதற்கிடையே மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்குள் எரிபொருளை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது.

இதை ஏற்று காசாவுக்கு எரிபொருளை அனுப்ப இஸ்ரேலின் போர்க்கால அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2 நாட்களுக்கு ஒருமுறை 1.40 லட்சம் லிட்டர் எரிபொருளை அனுப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரால் கடத்தி செல்லப்பட்ட 19 வயதான இஸ்ரேல் ராணுவ வீராங்கனை நோவா மார்சியனோ, பிணமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அவரது உடல் அல்-ஷிபா ஆஸ்பத்திரி அருகே கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply