• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிடா திரையிடப்பட்ட போது நடந்த ஒரு நிகழ்வு

சினிமா

சென்னை திரைப்பட விழாவில் 'கிடா' திரையிடப்பட்ட போது நடந்த ஒரு நிகழ்வினை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
படம் முடிந்து திரை அமைதியானது. 
வழக்கம் போல படம் எப்போது முடியும்? தப்பித்து வெளியே ஓடிவிடலாம் என்ற மனநிலையில் பார்வையாளர்கள் இல்லை. மாறாக அவர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். கிட்டத்தட்ட அறுபது வினாடிகளுக்கும் மேல் நீடித்த கைதட்டல் அது.
ஒவ்வொருவராக திரையரங்கை விட்டு வெளியேறத் துவங்கினார்கள். ஊடகத்தைச் சேர்ந்த நண்பர் பெண்மணி ஒருவரிடம் மைக்கை நீட்டினார்.
'படம் எப்படி இருந்தது?'

'நான் வசதியான குடும்பப் பின்னணியில் பிறந்தவள். இப்போது ஆடிட்டராகப் பணிபுரிகிறேன். தீபாவளி என்பதைக் கொண்டாட்டம் என்பதாக மட்டுமே அறிந்து வைத்திருக்கிறேன். 
ஆனால் இந்தப் படம் என்னுள் வேறுமாதிரியான தாக்கத்தை உருவாக்கிவிட்டது. நூறு ரூபாயின் மதிப்பு என்ன? என்பதைப் பற்றி இப்போது நான் சிந்திக்கிறேன்.
தீபாவளிக்கு உடுத்த ஒரு புதுச் சட்டை எடுக்க எத்தனை  போராட்டங்களைக் கடந்து வர வேண்டியிருக்கிறது என்பதைப் பார்க்க அதிர்ச்சியாக இருக்கிறது. என்னால் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தியேட்டரில் அழுது கொண்டேயிருந்தேன். 
இந்தப் படத்தில் வருகிற சிறுவனைப் போல் எத்தனையோ பேர் நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். என்னுடைய இப்போதைய சிந்தனையெல்லாம் அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்ய முடியுமா என்பது மட்டுந்தான்!'
அவருடைய கண்களில் இருந்து இப்போது மீண்டும் கண்ணீர் பெருக்கெடுத்தது.
நானும் இயக்குனர் ரா.வெங்கட் அவர்களும் இந்தக் காட்சியை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தோம். 
நான் அவரிடம் சொன்னேன், 
' திரைப்பட விழாக்களில் நீங்கள் வாங்கிய விருதுகளை விட மதிப்பு மிக்கது இந்தப் பெண்ணின் கண்ணீர்தான்!'
நான் புகைப்படக் கலைஞனாக பணிபுரிந்த காரணத்தினால் இந்தப் படத்திற்கு முட்டுக் கொடுக்கவில்லை. 
உண்மையாகவே இது நமக்கான படம். 
நம்மைச் சுற்றி வாழ்கிற எளிய மனிதர்களைப் பற்றிய படம். 
விருதுகளைக் குவித்த படம் என்பதினால் சோகத்தைப் பிழிந்து எடுத்துவிடுவார்கள் என்று நினைத்துவிட வேண்டாம். படத்தில் அப்படி எந்தக் காட்சியுமே கிடையாது. 
மாறாக இது நமக்குள் இருக்கிற நல்ல தன்மையை வெளிக் கொணர்கிற படம்.
உங்கள் குழந்தைகளுக்கு இந்தப் படத்தைக் காட்டுங்கள். அவர்கள் இதுவரை அறிந்திராத ஒரு புதிய அனுபவத்தைப் பெறுவார்கள்.
-இரா.குண அமுதன்.
மதுரை INOX - Vishaal De Mall மற்றும் திருநகர் கண்ணன் தேவி திரையங்குகளில் வெளியாகிறது.

Leave a Reply