• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கான தடை நீக்கம்.. 

இலங்கை

நடிகர் விஷால் தன்னுடைய 'விஷால் பிலிம் பேக்டரி' பட தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 21 கோடியே 29 லட்சம் கடனை பெற்றிருந்தார். இந்த கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டதுடன் கடனை திருப்பி செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையையும் லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், கடனை செலுத்தாமல் வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிட விஷாலுக்கு தடை விதிக்க கோரி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இருநீதிபதிகள் அமர்வு 15 கோடியை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன்பு உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை வெளியிடக் கூடாது என்று தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தாமல் இருந்தது, சொத்து விவரங்களை தாக்கல் செய்யாதது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க விஷாலுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்தும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நடிகர் விஷால் நேரில் ஆஜராகியிருந்தார். அப்போது உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளின்படி சொத்து விவரங்கள் குறித்து மனுத்தாக்கல் செய்யவில்லை, 15 கோடி ரூபாயை இதுவரை உயர் நீதிமன்றத்துக்கு செலுத்தவில்லை, தன்னிடம் நிதி ஆதாரம் இல்லை எனத் தெரிவித்த அதே நாளில் ஒரு கோடி ரூபாயை விஷால் வங்கி கணக்கில் பெறப்பட்டுள்ளது, இது நீதிமன்றத்துக்கு தவறான தகவலை தெரிவிப்பது என, நடிகர் விஷாலின் செயல்பாடு குறித்து நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு வழக்கறிஞர், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டதால் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்றும், நிதி ஆதாரம் இல்லை எனக் கூறிய நாளில் விஷாலின் வங்கிக் கணக்கில் 91 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது என்றும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, உயர் நிதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஏப்ரலில் 15 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய உத்தரவை உறுதி செய்த பிறகும், சொத்து விவரங்கள் குறித்து மனுத்தாக்கல் செய்யாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். விஷால் தரப்பில் இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்க ஒரு மத்தியஸ்தர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து லைகா நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை எப்படி செலுத்தப்படும் என்றும் நீதிபதி உத்தரவுபடி 15 கோடி ரூபாய் செலுத்தாவிட்டால் படங்கள் வெளியிட தடை விதிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இறுதியாக விஷால் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி முதல் கடந்த 13-ஆம் தேதி வரை அவரது நான்கு வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரது சொத்துகள் குறித்த ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் தயாரிப்பிற்கும் விஷாலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் இப்படத்தை வெளியிடுவதற்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 

Leave a Reply