• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நளின் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் சபையில் இருந்து வெளியேற்றம்

இலங்கை

நாடாளுமன்ற அமர்வுகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது குழப்பத்தை விளைவித்தமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நளின் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோரை சபையிலிருந்து வெளியேறுமாறு சபாநாயகர் அறிவித்திருந்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூல பதில் நேரத்தில் ஏற்பட்ட கடும் அமளி காரணமாக பிரதி சபாநாயகர் நாடாளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடு சட்டத்தின் கீழான ஒழுங்குமுறைகள், ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான உத்தரவு, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் வர்த்தமானி அறிவித்தல் குறித்து இன்று நாடாளுமன்ற விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகின. இதன்போது கேள்வி பதிலுக்காக நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய கேள்விக்கு ஆளும்தரப்பில் இருந்து உரிய பதில் வழங்கப்படவில்லை.

இருப்பினும் அவர் தொடர்ந்தும் தனது கேள்வியை எழுப்பிய நிலையில் சம்பந்தப்பட்ட அமைச்சர் பதில் வழங்குவதற்கு சபையில் இல்லை என்பதனால் நேரத்தை வீண்விரயம் செய்ய வேண்டாம் என ஆளும் கட்சியின் பிரதம கொறடா, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.

இருப்பினும் இந்த கேள்விக்கு பதில் வழங்க வேண்டும் என நளின் பண்டார தெரிவிக்க பிரதி சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்கியபோது பிரதமர் தினேஷ் குணவரத்னவும் நேரத்தை வீண்விரயம் செய்ய வேண்டாம் என்றும் சபையை ஒத்திவைக்குமாறு பிரதி சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து நளின் பண்டார கேள்வியெழுப்பிய போது அவரது ஒலிவாங்கியின் இணைப்பு துண்டிக்கப்பட்டது, இதனை தொடர்ந்து கடும் வாக்குவாதம் இடமபெற்றதால் நாடாளுமன்ற அமர்வை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.
 

Leave a Reply